இலங்கை

யாழ் மக்களுக்கு வைத்தியர்களின் கடும் எச்சரிக்கை

கடந்த இரண்டு நாட்களாக கொவிட் 19 தொற்றுடைய நோயாளிகள் அன்டிஜன்ட் பரிசோதனை மூலம் இனங்காணப்பட்டு வருகின்றனர் என யாழ். போதனா வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் யமுனானந்தா தெரிவித்துள்ளார். இன்றையதினம் யாழ் போதனா வைத்தியசாலையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இன்றுவரை இவ்வாறு ஐந்து நோயாளிகள் இனங்காணப்பட்டுள்ளார்கள், இவர்கள் சுவாசம் தொடர்பான தொற்றுடன் காணப்படுகின்றனர். இந்தத் தொற்றானது சமூகத்தில் பரவலடையாமல் இருப்பதற்கு முகக் கவசம் அணிதல் வேண்டும், சமூக இடைவெளியை பேணுதல் வேண்டும், மக்கள் நெருக்கமாக நடமாடும் இடங்களை தவிர்த்தல் வேண்டும்.

ஏனென்றால் கொவிட் தொற்று சமூகத்தில் ஒரு பாரிய தாக்கத்தை ஏற்படுத்தலாம். அல்லது தானாகவே இல்லாமல் போகலாம். நாங்கள் ஆரம்ப கட்டத்திலேயே சில முன் காப்பு நடவடிக்கைகளை ஏற்படுத்துவதன் மூலம் சமூக பரவலை கட்டுப்படுத்த முடியும். குறிப்பாக வயது முதிர்ந்தவர்களுக்கு இதன் தாக்கம் அதிகமாக ஏற்படலாம். இதனால் இறப்புக்கள் ஏற்படலாம். ஆகையால் வயது முதிர்ந்தவர்கள் முகக் கவசத்தை கட்டாயம் அணிய வேண்டும். அடுத்தபடியாக கர்ப்பிணி தாய்மார்களும் இதனால் அதிகம் பாதிப்பிற்கு உள்ளாகக்கூடியவர்களாக உள்ளனர். எனவே அவர்களும் முகக் கவசங்களை அணிவது நல்லது.

எனவே இரண்டு வாரங்களுக்கு வாரங்களுக்கு சன நெரிசல் உள்ள இடங்களை தவிர்ப்பது நல்லது. அன்டிஜன்ட் பரிசோதனை, பி.சி.ஆர் பரிசோதனை செய்து சுகாதார அமைச்சுக்கும் இது தொடர்பாக அறிவித்துள்ளோம். சுகாதார அமைச்சிலிருந்தும் எமக்கு அறிவித்தல்கள் வரும்.

கடந்த காலங்களில் கடைப்பிடித்த கொரோனா பாதுகாப்பு நடைமுறைகளை கடைப்பிடிப்பதன் மூலம் இதனை கட்டுப்படுத்தலாம் என எதிர்பார்க்கிறேன் என அவர் மேலும் தெரிவித்தார்.

Back to top button