இலங்கை

இன்று நள்ளிரவுடன் உள்ளூராட்சி மன்றகளின் அதிகார காலம் நிறைவு!

340 உள்ளூராட்சி மன்றகளின் அதிகார காலம் இன்று நள்ளிரவுடன் நிறைவு பெறுகிறது. இதன்படி, அந்த நிறுவனங்களின் நகர முதல்வர்கள், தவிசாளர்கள் உள்ளிட்டோருக்கு வழங்கப்பட்டுள்ள வாகனங்கள் ஆணையாளர் அல்லது செயலாளரிடம் கையளிக்கப்பட வேண்டும். அத்துடன், அந்த நிறுவனங்களின் உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவுகளை இன்றைய தினம் வரை மாத்திரம் வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள் மற்றும் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது. இதேவேளை, உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான அஞ்சல் மூல வாக்களிப்பை எதிர்வரும் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு முன்னதாக அறிவித்திருந்தது. இதன்படி, அஞ்சல் வாக்குச் சீட்டுகளை எதிர்வரும், 21ம் திகதி அஞ்சலகங்களுக்கு வழங்க திட்டமிடப்பட்டது. எவ்வாறாயினும், தற்போது அச்சிடப்பட்டுள்ள வாக்குச் சீட்டுகளுக்கான கட்டணம் செலுத்தப்படும் வரை அஞ்சல் மூல வாக்குச் சீட்டுக்களை ஒப்படைக்க முடியாது என அரச அச்சகர் கங்கானி லியனகே, தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அறிவித்திருந்தார். அஞ்சல் மூல வாக்களிப்பு, திட்டமிட்டவாறு நடத்தப்பட வேண்டுமானால் குறித்த வாக்குச் சீட்டுகள் அடுத்த சில நாட்களில் கிடைக்கப்பெற வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சி ஹேவா தெரிவித்துள்ளார். தற்போதைய நிலையை கருத்திற் கொண்டு நாளைய தினம் அஞ்சல் வாக்கு சீட்டுகளை தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் ஒப்படைக்க முடியாது என அரச அச்சகர் குறிப்பிட்டுள்ளார். எவ்வாறாயினும், எதிர்வரும் சில தினங்களில் குறித்த வாக்குச் சீட்டுகள் கிடைக்கப்பெற்றால் திட்டமிட்டவாறு அஞ்சல் மூல வாக்கெடுப்பை நடத்த முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார். அத்துடன், வாக்கெடுப்பு தொடர்பான அச்சுப் பணிகளுக்கு 500 மில்லியன் ரூபா செலவாகும் என அரச அச்சகம் மதிப்பீடு செய்துள்ளது. அதில் 200 மில்லியன் ரூபா முதற்கட்ட தேவைகளுக்காக கோரப்பட்டுள்ளதாக அரச அச்சகர் தெரிவித்துள்ளார். எனினும் 40 மில்லியன் ரூபா மாத்திரமே கிடைக்கப்பெற்றுள்ளதாக கங்கானி லியனகே குறிப்பிட்டுள்ளார்.

Back to top button