ஏப்ரல் 10 ஆம் திகதிக்கு முன் அரச ஊழியர்களின் சம்பளம், ஓய்வூதிய கொடுப்பனவுகள்!
அரச ஊழியர்களின் சம்பளம், ஓய்வூதியம் மற்றும் கொடுப்பனவுகளை ஏப்ரல் 10 ஆம் திகதிக்கு முன்னர் வழங்குவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். தனித்துவமான முகாமைத்துவ வேலைத்திட்டத்தில் இது நடைமுறைப்படுத்தப்படும் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். ருவன்வெல்ல பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்ச்சியொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இராஜாங்க அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார். பொருளாதார சிரமங்கள் இருந்தாலும் தமிழ், சிங்கள புத்தாண்டை முன்னிட்டு ஏப்ரல் 10ஆம் திகதிக்கு முன்னர் அரச ஊழியர் சம்பளம், ஓய்வூதியம் மற்றும் கொடுப்பனவு போன்றவற்றை வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். இதற்காக சுமார் 140 பில்லியன் ரூபா செலவிடப்படவுள்ளதாகவும், அதற்கமைய, நிதியமைச்சில் உள்ள கணக்குகள் மற்றும் வங்கி மேலதிக கொடுப்பனவுகளை நிர்வகித்தல் மற்றும் தேவைப்பட்டால் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை செலுத்தும் வேலைத்திட்டம் ஒன்றும் பயன்படுத்தப்படவுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.