இலங்கை
தகவலறியும் உரிமைக்கு பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தால் அச்சுறுத்தல் இல்லை – நீதி அமைச்சர்
தகவல் அறியும் உரிமைக்கு பாதிப்பு ஏற்படும் வகையிலான சரத்துகள், பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தில் இல்லை என நீதி அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நேற்றிரவு ஹிரு தொலைக்காட்சியில் ஒலிபரப்பான ‘சலகுன’ அரசியல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். தொலைபேசி உரையாடல்கள் உள்ளிட்ட தரவுகளை கண்காணிக்கும் வகையில் பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தில் தனியாக எந்த சரத்தும் உருவாக்கப்படவில்லை. தற்போது குற்றச் செயற்பாடுகள் மற்றும் கொலை சம்பவங்கள் உள்ளிட்ட விடயங்களின் போது நீதிமன்ற அனுமதியுடன் தொலைபேசி தரவுகளை பெற்றுக் கொள்ளும் அதிகாரம் உள்ளது. அத்துடன் பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்கள் உலக நாடுகள் பலவற்றிலும் சட்டமாக உள்ளதாகவும் நீதி அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.