இலங்கை

தேர்தல் நிதி தொடர்பாக நிதியமைச்சரிடம் இருந்து ஜனாதிபதிக்கு பறந்த அவசர கடிதம்!

உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்குத் தேவையான நிதியை விடுவிக்குமாறு நிதியமைச்சரிடம் தேர்தல் ஆணைக்குழு எழுத்துப்பூர்வமாக கோரிக்கை விடுத்திருந்த நிலையில், நிதியமைச்சர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் (Ranil Wickremesinghe) எழுத்து மூலம் இது தொடர்பான கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் ஜி. புஞ்சிஹேவா குறிப்பிட்டுள்ளார்.

உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பான நிதியை வெளியிடுவது தொடர்பில் நேரடித் தீர்மானங்களை எடுக்க முடியாது எனவும் அதற்கு நிதியமைச்சரின் அனுமதியைப் பெற வேண்டும் எனவும் நிதி அமைச்சின் செயலாளர் அண்மையில் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அறிவித்திருந்தார். இதற்கமைய, தேர்தலுக்குத் தேவையான நிதியை விடுவிக்குமாறு தேர்தல் ஆணைக்குழு நிதி அமைச்சரிடம் எழுத்துப்பூர்வமாக கோரிக்கை விடுத்ததாக நிமல் ஜி. புஞ்சிஹேவா குறிப்பிட்டுள்ளார். உள்ளூராட்சித் தேர்தலை நடத்துவதற்கு நிதிப் பற்றாக்குறை காரணமாக மார்ச் மாதம் 9ஆம் திகதி நடைபெறவிருந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல் ஏப்ரல் 25ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. எவ்வாறாயினும், தேர்தல் தொடர்பான நடவடிக்கைகளுக்கு தேவையான நிதி இதுவரை கிடைக்கப்பெறாததால், வாக்குச் சீட்டு அச்சடிக்கும் பணியை ஆரம்பிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அரசாங்க அச்சக பிரதானி கங்கானி லியனகே தெரிவித்துள்ளார். இதன்படி எதிர்வரும் மார்ச் மாதம் 20 ஆம் திகதிக்கு முன்னர் தபால் மூல வாக்குச்சீட்டுக்களை தபால் நிலையத்திற்கு வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக கங்கானி லியனகே குறிப்பிட்டுள்ளார்.

Back to top button