இலங்கை

நடப்பாண்டில் பொருளாதாரம் மேலும் சுருங்கும்: 2024 இல் படிப்படியாக மீட்சியை தொடங்கும் – ஆசிய அபிவிருத்தி வங்கி

முன்னோடியில்லாத பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்வதால், இலங்கையின் பொருளாதாரம் 2023 இல் மேலும் சுருங்கும் என்று, அது 2024 இல் படிப்படியாக மீட்சியைத் தொடங்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளதாக ஆசிய அபிவிருத்தி வங்கி தெரிவித்துள்ள. தமது வருடாந்த முதன்மை பொருளாதார வெளியீடான, Asian Development Outlook (ADO) ஆசிய அபிவிருத்தி வங்கி இதனைத் தெரிவித்துள்ளது.

கடன் மறுசீரமைப்பு மற்றும் கொடுப்பனவுகளின் இருப்பு சிக்கல்களுடன் இலங்கை தொடர்ந்து போராடுவதால், பொருளாதாரம் 2022 இல் 7.8% ஆக சுருங்கியது அது 2023 ஆம் ஆண்டில் 3% ஆக சுருங்கும் என்று கணிக்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கை கூறுகிறது.. 2019 இன் வரிக் சலுகைகளை திரும்பப் பெறுதல் மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) விரிவாக்கப்பட்ட நிதி வசதிக்கான அண்மைய ஒப்புதல் போன்ற சீர்திருத்த நடவடிக்கைகள் நாட்டின் பொருளாதாரத்தை நிலைப்படுத்துவதற்கான முயற்சிகளுக்கு ஆதரவளிக்கும் என்று ஆசிய அபிவிருத்தி வங்கி கூறுகிறது. கடன் நிவாரணம் மற்றும் சீர்திருத்தங்களின் உறுதியான அமுலாக்கம் ஆகியவற்றினால் சரியான நேரத்தில் இலங்கை நெருக்கடியிலிருந்து முன்னேற்றம் அடைகிறது என்று ஆசிய வங்கி மேலும் கூறியது.

2022 ஆம் ஆண்டில், வெளிநாட்டு நாணயத் தட்டுப்பாடு ஏற்பட்டதுடன், இலங்கைக்கு இறக்குமதி செய்ய வேண்டிய அத்தியாவசியப் பொருட்களின் பற்றாக்குறைக்கு வழிவகுத்தது. எரிபொருள் பற்றாக்குறை காரணமாக நீடித்த மின்வெட்டு மற்றும் போக்குவரத்து இடையூறுகள் கடுமையாகின. பணவீக்கம் உயர்ந்து வாழ்க்கைத் தரத்தை சீரழித்து அது பலரை வறுமையில் தள்ளியது. பொருளாதார நெருக்கடியானது ஏழை மற்றும் நலிந்த மக்களை வெகுவாக பாதித்துள்ளது. இலங்கையின் பொருளாதார பாதிப்பை நிவர்த்தி செய்வதற்கு ஊழலுக்கு எதிரான சட்டத்தை வலுப்படுத்துதல், வலுவான நிறுவனங்களை கட்டியெழுப்புதல் மற்றும் வெளிப்படைத்தன்மையை அதிகரிப்பது போன்ற நிர்வாக மற்றும் பொறுப்புக்கூறல் பொறிமுறைகளை மேம்படுத்துவது இன்றியமையாததாக ஆசிய அபிவிருத்தி வங்கி கருதுகிறது.

Back to top button