பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை நாடாளுமன்றில் சமர்ப்பிக்கும் தீர்மானம் ஒத்திவைப்பு – நீதியமைச்சர்!
பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை நாடாளுமன்றில் சமர்ப்பிப்பதனை ஒத்திவைக்க தீர்மானித்துள்ளதாக நீதியமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பல தரப்பினரால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை கருத்திற்கொண்டு இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார். பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் கடந்த மார்ச் 22 ஆம் திகதி அதிவிசேட வர்த்தமானியில் வெளியானது. பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை ஒழித்து, அதற்கு பதிலாக பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இதேவேளை, தாம் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட பங்குதாரர்களுடன் போதிய ஆலோசனைகள் இன்றி வர்த்தமானியில் இந்த சட்டமூலம் வெளியிடப்பட்டுள்ளதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் நேற்று அறிவித்திருந்ததுடன், அதனை மீளாய்வு செய்வதற்கும் சிரேஷ்ட சட்டத்தரணிகள் குழுவொன்றையும் நியமித்துள்ளது. இந்தநிலையில், பரந்த அளவிலான பங்குதாரர்களின் ஆலோசனை மற்றும் சட்டத்தரணிகள் சங்கம் உட்பட பங்குதாரர்களின் கவலைகள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும் வரை சட்டமூலத்தை ஒத்திவைப்பது குறித்து பரிசீலிக்குமாறு அரசாங்கத்திடம் அந்த சங்கம் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.