பாடசாலையும் அத்தியாவசிய சேவையாக்கப்படும் – ஜனாதிபதி
பாடசாலை சேவையை அத்தியாவசிய சேவையாக்க நாடாளுமன்றத்தில் சட்டமூலம் ஒன்றை முன்வைக்க நேரிடும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தியுள்ளார். கொழும்பில் உள்ள பாடசாலையொன்றில் சீருடை மற்றும் பாடசாலை புத்தக விநியோக நிகழ்வை ஆரம்பித்து உரையாற்றுகையில் இந்த விடயத்தை அவர் குறிப்பிட்டுள்ளார். எதிர்காலத்திற்கான பிரஜைகளை உருவாக்குவது கல்வி அமைச்சின் பொறுப்பாகும். கல்வி என்பது கற்பித்தல் மற்றும் பரீட்சைகளுடன் தொடர்புடையது மட்டுமல்ல. கல்வி என்பது முன்னுதாரணமாகும். அது பாடசாலையில் இருந்து வரவேண்டும். பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள் அந்த முன்னுதாரணத்தை வழங்க வேண்டும். அதிலிருந்து விலக முடியாது. அவர்கள், தங்களின் நடத்தைகள் மற்றும் கடமைகளை நிறைவேற்றுவது குறித்து அவர்கள் பார்க்க வேண்டும். சமூகம், அதிபர்கள், ஆசிரியர் குழாத்தினரின் செயற்பாடுகளிலிருந்து பாடசாலைகளைப் பிரிக்க முடியாது. அனைவரையும் இணைத்துக்கொண்டு செல்ல வேண்டும். கல்வியை வழங்குவதை தடுக்க முடியாது. கற்பித்தலையும், பரீட்சைகள் நடத்துவதையும் எம்மால் நிறுத்த முடியாது. எனவே, எஞ்சியிருக்கின்ற பிரச்சினைகள் தீரும் என எதிர்பார்க்கிறோம். இல்லாவிட்டால், அரசாங்கம் என்ற அடிப்படையில், பாடசாலை சேவையை அத்தியாவசிய சேவையாக மாற்றுவதற்கு, நாடாளுமன்றத்தில் சட்டமூலம் ஒன்றை முன்வைக்க நேரிடும். இது அவசியமா? இல்லையா? என நாட்டில் இயலுமான அளவு விவாதிக்கலாம். ஆனால், சில காரணங்களாலும், வேறு காரணங்களாலும், இந்த நாட்டின் மாணவர்களை பணயக் கைதிகளாக வைத்திருக்க இடமளிக்க முடியாது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவத்துள்ளார்.