ஏனையவை

ஹாலோவீன் (Halloween) தினக் கொண்டாட்டம்! பேய்களுக்கு ஏன் திருவிழா?

பேய்களைப் பற்றிய பயம் உலகெங்கும் உள்ளது. இறந்துபோனவர்களின் ஆன்மாக்கள், திருப்தியடையாமல் உலவிவந்தால், அவை மனிதர்களைத் தாக்கும் என்ற நம்பிக்கை, எல்லா நாடுகளிலும் எல்லா மனிதர்களிடையேயும் இருந்துவருகிறது. இனம், மொழி, நாடு, படித்தவர், படிக்காதவர் என எந்த வித்தியாசமும் இன்றி பேய்களைப் பற்றிய பயம் இருந்துவருகிறது. கடவுளர்களுக்கு எல்லாம் நாம் திருவிழா கொண்டாடுவோம், இது இந்தியர்களின் வழக்கம். ஆனால், பேய்களுக்கு என்று ஒரு விழாவை அமெரிக்கர்கள் கொண்டாடுகிறார்கள். அதுதான் ஹாலோவீன் திருவிழா.

ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் 31-ம் நாளை, ஹாலோவீன் தினமாக அமெரிக்கா, பிரிட்டன், கனடா, அயர்லாந்து உள்ளிட்ட நாடுகள் கொண்டாடி வருகின்றன. அதன்படி இன்றைய தினம், ஹாலோவீன் தினமாக பேய்களுக்காகக் கொண்டாடப்படுகிறது.

பேய்களுக்கு ஏன் திருவிழா? என்றால், அதற்கும் ஒரு காரணம் இருக்கிறது. அகாலமாக இறந்துபோனவர்கள், தம் தேவைகள் முடிந்துபோய், தங்கள் வினைகளுக்கு ஏற்ப சொர்க்கத்துக்கும் போகாமல் நரகத்துக்கும் போகாமல் அலைந்துகொண்டிருப்பார்கள். இப்படிப் பேயாக அலைந்துகொண்டிருப்பவர்களை சந்தோஷப்படுத்தும் நன்னாள்தான், ஹாலோவீன் நாள் எனப்படுகிறது.

அலையும் ஆவிகளை இப்படிக் கொண்டாடி மகிழ்வதால், தங்களுக்கு எந்த விதமான கெட்டதையும் அவை செய்யாது என்பது மேற்கத்தியவர்களின் நம்பிக்கை. முதன்முதலில் இந்தப் பேய்களின் தினம் அயர்லாந்தில்தான் கொண்டாடப்பட்டது. அகாலமாக உயிர் நீத்த புனிதத் துறவிகளின் நினைவாகவே இந்த நாள் ரோமன் கத்தோலிக்கர்களால் கடைபிடிக்கப்பட்டது. பிப்ரவரி 21, மே 13 ஆகிய நாளில்தான் முதலில் இந்த ஹாலோவீன் தினம் கொண்டாடப்பட்டது. பின்னர், அமெரிக்காவில் குடியேறிய ஐரோப்பியர்களால் இந்நாள் அக்டோபர் 31-ம் தேதியானது. பூச்சாண்டிகள் தினம் என்று வர்ணிக்கப்படும் இந்த நாளில், ஆரம்பத்தில் உருளைக் கிழங்கை வெட்டி, அதன் உள்ளே மெழுகுவத்தியை வைத்து, மந்திரித்து,பேய்களை விரட்டினர். பின்னர், பெரிய பரங்கிக் காய்களை வெட்டி, பயங்கரமாக அலங்கரித்து, அதை வீட்டுக்கு வெளியே வைத்துப் பேய்களைத் துரத்த ஆரம்பித்தனர்.

காலம் செல்லச்செல்ல இந்த ஹாலோவீன் தினம் பயங்கரமான கற்பனை வடிவங்களால் சிறப்பைப் பெறத்துவங்கியது. காய்ந்த சருகுகள், எலும்புக்கூடுகள், சூனியக்கார பொம்மைகள், பிரமாண்ட சிலந்திகள், ஓநாய் பொம்மைகள் எனப் பலவிதமான உருவங்களைக்கொண்டு ஹாலோவீன் தினம் படு திகிலாகக் கொண்டாடப்படுகிறது. அமெரிக்காவின் 16 மாநிலங்களில் உள்ள ஹாலோவீன் அருங்காட்சியகங்களில் உள்ள உருவங்கள், இந்த நாளில் வீதிகளில் உலா வரத்தொடங்கிவிடும். இந்த நாளின் இரவு முழுக்க விதவிதமான பேய்களின் அலங்கார அணிவகுப்புகள், காண்பவரை மிரளச்செய்யும். பேய்களின் முகமூடியை அணிந்துகொள்ளும் இளைஞர், யுவதிகள் சாலையெங்கும் திரிந்து பீதியைக் கிளம்புவார்கள். திடீர் திடீர் என வீடுகளுக்குள் நுழைந்து, ‘ஹேப்பி ஹாலோவீன் டே’ என்று குரல் எழுப்புவார்கள்.

கிறித்துமஸ் விழாவில் வரும் தாத்தாவைப் போலவே, பயங்கரமான உருவம்கொண்டவர்களும் இந்த நாளில் குழந்தைகளுக்கு இனிப்புகளை வழங்கி மகிழ்வார்கள். பள்ளிகள், கல்லூரிகளிலும் இந்த நாள் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. பேய்களைத் திருப்திபடுத்தும் விழா என்பதைத் தாண்டி, இந்த விழா உற்சாகமூட்டும் ஒரு திகில் விழாவாகப் புகழ்பெற்றுவருகிறது. மறைந்தவர்களின் கல்லறைக்குச் சென்று, அவர்களுக்குப் பிடித்ததைப் படைக்கும் வழக்கமும் இந்த நாளில் உள்ளது. இந்த நாள், நமது மயானக் கொள்ளை திருவிழாவைப்போல இருந்தாலும், அங்கு ஆர்ப்பாட்டம் அதிகம் எனலாம். கிறித்துமஸ் விழாவுக்கு அடுத்து, இந்த ஹாலோவீன் தினத்தில்தான் மேற்கத்திய நாடுகளில் விற்பனையும் உற்சாகமும் அதிகம் என்கிறார்கள். எப்படியோ, பேய்களின் மீதான பயம் ஒரு திருவிழாவாக உருவாகி, இன்று கோலாகலமான ஒரு திருநாளாக மாறிப்போய் உள்ளது. விழாக்களின் அடிப்படை, உறவுகளைக் கொண்டாடுவதுதான் என்றால், இந்த ஹலோவீன் தினம் எனும் பூச்சாண்டிகள் தினமும் கொண்டாடப்படவேண்டிய திருநாளே.

Back to top button