இந்தியாவில் பாலம் கட்டுமானத்தின்போது 17 தொழிலாளர்கள் மரணம்! மேலும் பலர் பலியானதாக அச்சம்
இந்திய மாநிலம் மிசோரத்தில் ரயில்வே பாலம் கட்டுமானத்தின்போது திடீரென இடிந்து விழுந்ததில், 17 பேர் பலியானது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மிசோரம் மாநிலம் சாய்ராங் பகுதியின் ஐஸ்வாலில் இருந்து 21 கிலோ மீற்றர் தொலைவில் ரயில்வே பாலத்தின் கட்டுமானம் நடந்து கொண்டிருந்தது. இதில் சுமார் 35 முதல் 40 பணியாளர்கள் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில், இன்று காலை 10 மணியளவில் திடீரென பாலத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் சிக்கிய பணியாளர்கள் 17 பேர் துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த பொலிஸார், மீட்புப்படையினர் 17 பேரின் உடல்களை மீட்டனர்.
குறித்த சம்பவம் மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், முதல்வர் ஜோரம்தங்கா இதற்கு ஆழ்ந்த வருத்தம் தெரிவித்தார். மேலும் மீட்புப் பணிகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளார். இதற்கிடையில், விபத்தினால் பலரை காணவில்லை என்பதால் பலி எண்ணிக்கை உயரக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. ரயில்வே துறையினர் துயர சம்பவம் கூறும்போது, சம்பவ இடத்திற்கு அதிகாரிகள் விரைந்துள்ளனர். வடகிழக்கு எல்லை ரயில்வேயின் மூத்த அதிகாரிகளும் அந்த இடத்திற்கு சென்றுள்ளனர் என தெரிவித்துள்ளது.