இலங்கை மக்களுக்கு 2024 நெருக்கடி மிகுந்த ஆண்டாக மாறும்; பொருட்களின் விலை 72 வீதத்தால் உயரும்
இலங்கையில் அடுத்த வருடம்(2024) அத்தியாவசிய உணவுப் பொருட்கள் பலவற்றின் விலை 72 சதவீதம் உயரும் என பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் துறை பேராசிரியர் அமிந்த மெத்சிலா தெரிவித்துள்ளார். மேலும், சேவைகள் உள்ளிட்ட கட்டணங்களும் கணிசமான அளவு அதிகரிக்கக் கூடும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், 2024ஆம் ஆண்டில் இலங்கையில் பொருட்களின் விலை மற்றும் சேவைகளின் கட்டணங்கள் உள்ளிட்டவை கணிசமான அளவில் அதிகரிக்கும். காரணம் மறைமுக வரிகள் மூலமை் 72 சதவீதம் கூடுதல் வருவாயை அரசு எதிர்பார்ப்பதே ஆகும்.
இந்நிலையில், அடுத்த ஆண்டு வரவு செலவுத் திட்ட ஆவணத்தின்படி 122,400 கோடி ரூபாய் (1224 பில்லியன்) கூடுதல் வருமானத்தை அரசு எதிர்பார்க்கிறது. அதில் 72 சதவீதம் வற் மற்றும் இதர கூடுதல் வரிகள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு வரி விதிக்கப்படும் போது, வணிகர்கள் வாடிக்கையாளரிடமிருந்து வரியை முழுமையாக வசூலிக்க முயற்சிப்பார்கள். அதன்படி, இந்த 72 சதவீத மறைமுக வரி நுகர்வோர் மீது செலுத்தப்படுவது தவிர்க்க முடியாதது. அரிசி, மா, சர்க்கரை, பருப்பு, உருளைக்கிழங்கு, வெங்காயம் போன்ற அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை 72 சதவீதம் உயரும். பொது மக்களின் வாழ்க்கைத் தரம் குறைந்து பணவீக்கம் அதிகரிக்கும் என குறிப்பிட்டுள்ளார்.