இலங்கை

யாழில் ஏற்பட்ட மோதலில் பெண்கள் உள்ளிட்ட 23 பேர் அதிரடியாக கைது!

யாழ்ப்பாணம் கோப்பாய் மத்தி கிராமத்தில் இரண்டு தரப்புகளுக்கு இடையே கடந்த இரண்டு நாட்களாக நீடித்த மோதல் தொடர்பில் கைதான 3 பெண்கள் உட்பட 23 பேர் விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளனர். மோதல் நிலையைக் கட்டுப்படுத்த கைது செய்யப்பட்ட 3 பெண்கள் உள்ளிட்ட 23 பேரை 14 நாள்கள் விளக்கமறியலில் வைக்க யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உள்பட்ட கோப்பாய் மத்தி கிராமத்தில் இரண்டு தரப்புகளுக்கு இடையே கடந்த சில தினங்களாக நீடித்து வந்த முரண்பாடு கடந்த திங்கட்கிழமை (6) இரவு மற்றும் செவ்வாய்கிழமை (7) ஆகிய இரு நாட்களாக மோதலாக மாறியது. இந்த மோதலினால் பல ஆயிரம் ரூபாய் பெறுமதியான சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கப்பட்டன. சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் அங்கு சென்று விசாரணைகளை முன்னெடுத்த போது, இரண்டு தரப்பிலுமாக 3 பெண்கள் உள்ளிட்ட 23 பேர் கைது செய்யப்பட்டனர்.

மேலும், நபர்களைத் தாக்கியமை, சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தமை மற்றும் பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்தமை தொடர்பில் 23 பேருக்கும் எதிராக யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முதல் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு இன்று புதன்கிழமை முற்படுத்தப்பட்டனர். இதன்போது பொலிஸாரின் விண்ணப்பத்தை ஆராய்ந்த யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராஜா, 23 பேரையும் எதிர்வரும் 22 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

Back to top button