இங்கிலாந்தில் 39 புலம்பெயர்ந்தோர் ட்ரக்குக்குள் மூச்சுத்திணறி உயிரிழந்த வழக்கு – சமீபத்தில் வெளியாகியுள்ள தகவல்!
பிரித்தானியாவின் எசெக்சில், ட்ரக் ஒன்றிற்குள் 39 புலம்பெயர்வோர் உயிரிழந்து கிடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது நினைவிருக்கலாம். 2019ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம் 23ஆம் திகதி, இங்கிலாந்திலுள்ள எசெக்சில், லொறி ஒன்றின் ட்ரெய்லருக்குள் 39 புலம்பெயர்ந்தோர் சடலமாக கண்டெடுக்கப்பட்டனர். அவர்களில் 28 பேர் ஆண்கள், 8 பேர் பெண்கள், 3 பேர் குழந்தைகள். அவர்கள் அனைவரும் வியட்நாம் நாட்டவர்கள். அந்த லொறி, பெல்ஜியத்திலிருந்து இங்கிலாந்துக்கு கொண்டுவரப்பட்டிருந்தது. காற்றோ, வெளிச்சமோ இல்லாத அந்த ட்ரெய்லருக்குள் சிக்கி, மூச்சுத்திணறி, கோரமான முறையில் அவர்கள் அனைவரும் உயிரிழந்திருந்தார்கள்.
இந்நிலையில், ஆளுக்கு 13,000 பவுண்டுகள் செலுத்தி, பிரித்தானியாவில் புதிய வாழ்வு கிடைக்கும் என நம்பி வந்த அவர்கள் அனைவரும், சடலங்களாகத்தான் பிரித்தானியாவை வந்தடைந்தார்கள். இந்நிலையில், அந்த மக்களை கடத்தியதன் பின்னணியில் மூளையாக செயல்பட்டவர்களில் ஒருவரான Marius Mihai Draghici (50) என்பவருக்கு 12 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், பிரித்தானியாவிலிருந்து தப்பியோடிய Marius, கடந்த ஆண்டு ஆகத்து மாதம் ரொமேனியாவில் பொலிசாரிடம் சிக்கினார். பின்னர் பிரித்தானியாவுக்குக் கொண்டுவரப்பட்ட அவருக்கு தற்போது சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அவர்மீது, 39 கொலைக்குற்றச்சாட்டுகள் மற்றும் சட்ட விரோத புலம்பெயர்தலுக்கு உதவ சதி செய்தது ஆகிய குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.