உடல்நலம்

நீண்ட ஆயுளுடன் ஆரோக்கியமாக வாழ.. தினமும் சாப்பிட வேண்டிய 4 உணவுகள்

எல்லோருமே நோய் நொடி இல்லாத நீண்ட ஆயுளுடன் கூடிய வாழ்க்கையை வாழ வேண்டும் என்பதே ஆசையாக இருக்கும்.

ஆனால் துரித உணவுகள், உடற்பயிற்சி இல்லாதது, செல்போனில் அடிமையாகி கிடப்பது என வாழ்க்கைமுறையின் மாற்றங்களால் பல சிக்கல்களை சந்திக்கலாம், இதனால் உடற்பருமன் தொடங்கி பல பிரச்சனைகளும் வரிசைகட்டி நிற்கும்.

எனவே நம்முடைய அன்றாட வாழ்வில் ஒரு சில உணவுப்பொருட்களை சேர்த்துக் கொண்டே வந்தால் பல நோய்களில் இருந்து நம்மை பாதுகாக்கும்.

அந்த உணவுகள் என்னென்ன? தொடர்ந்து சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்கள் என்னென்ன? என்பது குறித்து தெரிந்து கொள்வோம்.
சின்ன வெங்காயம்

சின்ன வெங்காயத்தை பச்சையாக தினமும் சாப்பிட்டு வந்தால் அதிலிருக்கும் பல நன்மைகள் நம் உடலுக்கு ஆரோக்கியத்தை தருகின்றன.

சின்ன வெங்காயத்தை சமைத்து சாப்பிடுவதை விட பச்சையாக சாப்பிட்டால் அதில் இருக்கும் ஊட்டச்சத்து முழுமையாகக் கிடைக்கும்.

வெங்காயத்தில் அதிகளவு புரதச்சத்துக்கள், தாது உப்புக்கள், வைட்டமின்கள் ஆகியவை உள்ளன.

சின்ன வெங்காயத்தில் அதிகளவு உள்ள ரிபோபிளவின் என்னும் வைட்டமின் பி, வாய் புண் மற்றும் கண்வலி போன்ற நோய்கள் குணமாகும். மேலும் வெங்காயம் உடலில் உள்ள கெட்ட நீரை வெளியேற்றும்.

பச்சை வெங்காயத்தை தொடர்ந்து உண்பதால், இரும்புச்சத்து உடலுக்கு அதிகளவில் கிடைக்கும்.

இரத்த சோகை நோய்கள், தலைவலி, முழங்கால் வலி, பார்வை மங்குதல் போன்றவை குணமாகும், இதய நோய் உள்ளவர்களுக்கு மிகச்சிறந்த மருந்தாக வெங்காயம் விளங்குகிறது.

வெங்காயத்தை அதிகளவு உண்டுவந்தால் மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும் ஆபத்து பல மடங்கு குறைகின்றது.

மேலும், காலரா நோய் உள்ளவர்களுக்கு வெங்காயத்துடன் மிளகு மற்றும் நாட்டுச்சக்கரை சேர்த்து கொடுத்துவந்தால் காலரா நோய் குணமாகும்.
பூண்டு

பூண்டு என்பது வெங்காய குடும்பத்தைச் சேர்ந்தது. பூண்டில் அதிகளவு மருத்துவகுணங்கள் மிகுந்துள்ளன.

மேற்கத்திய மருத்துவத்தின் தந்தை என்றழைக்கப்படும் கிரேக்க மருத்துவர் ஹிப்போக்ரேட்ஸ் பல்வேறு நோய்களுக்கு பூண்டை பரிந்துரைப்பது உண்டாம்.

பூண்டு சாப்பிடுபவர்களுக்கு சளித்தொல்லை நீங்கும், மேலும் பூண்டு, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

பூண்டை தொடர்ந்து உண்பதால் ரத்த அழுத்தம் குறைகின்றது. பூண்டு கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்துவதால் இதய நோய்கள் ஏற்படாமல் தடுக்கப்படுகின்றன. மேலும் தொற்று நோய்கள் வராமலிருக்க உதவிகிறது.

பூண்டு உடலில் உள்ள நச்சுக்களை அகற்றும் தன்மை கொண்டது. இது எலும்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்த செய்கிறது. மேலும் பெண்களுக்கு ஈஸ்ட்ரோஜென் அளவைக் கூட்டுகிறது.
கறிவேப்பிலை

பொதுவாக கருவேப்பிலைகள் உணவின் மணத்தை கூட்டவும், சுவையை அதிகரிக்கவும் சமையலில் அதிகளவு பயன்படுத்துகிறோம்.

இதனை தவிர்த்து கருவேப்பிலையில் அதிகளவு நன்மைகளும் உண்டு. கருவேப்பிலையில் வைட்டமின் A, B, C, கால்சியம் மற்றும் இரும்புச்சத்துக்கள் அதிகளவில் உள்ளது.

தினமும் கருவேப்பிலைலையை பச்சையாக சாப்பிட்டு வந்தால் உடலில் ஏற்படும் பல பிரச்சனைகள் குணமாகும். மேலும் முடி வளர்ச்சிக்கும் இது உதவுகிறது.

காலையில் வெறும் வயிற்றில் கருவேப்பிலையை சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் நீங்கும். இரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரித்து இரத்த சோகை பிரச்னையை சரி செய்கிறது.

மேலும் இரத்தத்தின் சர்க்கரை அளவை சீராக வைத்துக்கொள்ள உதவுகிறது. இதய நோய் வராமல் பாதுகாக்கிறது, செரிமான கோளாறுகளை சரிசெய்கிறது மற்றும் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி கல்லீரல்களை பாதுகாக்க உதவுகிறது.
வெந்தயம்

வெந்தயம் அதிகளவு நார்சத்தைக் கொண்டுள்ளது. இதை உண்பதன் மூலம் நமது உடலுக்கு பல்வேறு பலன் வந்தடைகிறது. வெந்தயத்தை தினமும் உட்கொள்வதன் மூலம் இரும்பு மற்றும் கால்சியம் சத்து கிடைக்கிறது.

வயிற்று கோளாறுகளுக்கு சிறந்த மருந்தாக விளங்குகிறது, மலச்சிக்கலை தடுத்து நிறுத்துகிறது.

சர்க்கரை நோயாளிகளுக்கு வெந்தயம் ஒரு சிறந்த உணவாக பயன்படுகிறது என உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைத்துள்ளது. ரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால் போன்றவற்றையும் வெந்தயம் குறைக்கிறது.

வெந்தயம் ஜீரண உறுப்புகளை சரி செய்து செரிமானத்தை சீராக்குகிறது. குறிப்பாக மாரடைப்பு, மூச்சு முட்டுதல், ஆஸ்துமா போன்ற நோய்களுக்கு இது மருந்தாக பயன்படுகிறது.

இதனால் வயிற்றில் கழிவுகள் சேராமல் சீராவதால், இரத்த ஓட்டம் விருத்தியடைவதால் இதய நோய் இல்லாமல் பாதுகாக்கிறது . இதய நோய் உள்ளவர்கள் வலி ஏற்படும் போது இந்த கஷாயத்தை எடுத்துக் கொள்வதன் மூலம் வலி குறைகிறது.

Back to top button