ஆன்மிகம்

நவராத்திரி கடைசி நாளில் இந்த தவற செய்ய கூடாதாம்

இந்துக்களின் வழிபாட்டு முறையில் கும்பம் அல்லது கலச வழிபாடு மிகவும் புனிதமானதாக கருதப்படுகிறது.

கலசத்தில் நீர் நிரப்பி, அதில் மஞ்சள், சந்தனம், பச்சைக் கற்பூரம், நாணயம், எலுமிச்சை பழம் ஆகியவற்றை சேர்த்து வைத்து இதில் மந்திரம் மற்றும் வழிபாட்டின் மூலம் தெய்வ சக்தியை எழுந்தருளச் செய்து அந்த நீரை புனித நீராக மாற்றி வழிபடுவது மிகவும் சிறப்பானதாகும்.

பஞ்ச பூதங்களின் ஒன்றான நீர் மனிதனின் பிறப்பு முதல் இறப்பு வரை மட்டுமல்ல இறந்த பிறகும் தர்ப்பணம் போன்றவை செய்வதற்கு முக்கியமாக பயன்படுத்தப்படுகிறது.

கும்பம் என்பது பரிபூரணம் அல்லது முழுமை பெற்றதன் அடையாளம் ஆகும். இதில் தெய்வ சக்தியை எழுந்தருள செய்து பிறகு அதில் உள்ள நீரை வீடுகளில் தெளிப்பதால் வீட்டில் எப்போதும் தெய்வ சக்தி நிறைந்திருக்கும்.

இதனால் எதிர்மறை ஆற்றல்கள், தீமைகள், கண்திருஷ்டி ஆகியவை நீங்கி வீட்டில் சுபிட்சம் ஏற்படும் என்பது நம்பிக்கை. நவராத்திரி வழிபாட்டிலும் கலசம் வைத்து வழிபடுவது முக்கியமான ஒன்றாகும்.

நவராத்திரி வழிபாடு

வருடத்திற்கு நான்கு நவராத்திரிகள் வந்தாலும் புரட்டாசி மாதம் மகாளய அமாவாசைக்கு பிறகு வரும் சாரதா நவராத்திரியை தான் அனைவரும் சிறப்பாகக் கொண்டாடுகிறோம்.

நவராத்திரியை மக்கள் நான்கு விதமாக கொண்டாடுவது வழக்கம். ஒன்று கொலு வைத்து, 2வது கலசம் வைத்து, 3வது அகண்ட தீபம் ஏற்றி, 4வது படத்தை வைத்து வழிபடுவது வழக்கம்.

இதில் கொலு வைக்க முடியாதவர்கள் கலசம் அமைத்து, அதில் அம்பிகையை ஆவாஹனம் செய்து வழிபடுவதுண்டு.

நவராத்திரி விழாவின் ஆரம்ப நிகழ்வாக நவராத்திரியின் முதல் நாளில் கலசம் அமைப்பார்கள்.

உலோகங்களால் ஆன சொம்பின் மீது தேங்காய் வைத்து மாவிலைகள் வைத்து அலங்கரித்து வழிபடுவோம். இந்த கலசம் அல்லத கும்பம் மிகவும் புனிதமானதாகும்.

இதில் துர்க்கையும், துர்க்கையின் மற்ற வடிவங்களையும் ஆவாஹனம் செய்து நவராத்திரியின் ஒன்பது நாட்களும் வழிபடுவோம்.

கலச வழிபாடு

கலசம் வைத்து வழிபடுவதும் கொலு அமைத்து வழிபட்ட பலனை தரக் கூடியதாகும். இதனால் வீட்டில் மகிழ்ச்சி, செல்வ வளம் ஆகியன பெருகும் என்பது நம்பிக்கை.

நவராத்திரியின் முதல் நாளில் கலசம் அமைப்பதை எவ்வாற கவனமாக செய்ய வேண்டுமோ அதே போல் நவராத்திரியின் ஒன்பதாவது நாள் கலசத்தை பிரிக்கும் போதும் மிக கவனமாக செய்ய வேண்டும்.

ஏதாவது சிறு தவறு செய்தால் கூட அது துர்க்கை அம்மனை அவமரியாதை செய்வதற்கு சமமாகி விடும். இதனால் துர்க்கையின் அருள் கிடைப்பதற்கு பதிலாக பெரும் நஷ்டமும் துன்பமும் ஏற்படும்.

கலசம் பிரிக்கும் முறை

கலசத்தை அமைக்கும் போது எவ்வாறு நல்ல நேரம் பார்த்து அமைக்கிறோமோ அதே போல் கலசத்தை பிரிக்கும் போதும் நல்ல நேரம் பார்த்து பிரிக்க வேண்டும்.

முதலில் கலசத்தின் மீது வைத்துள்ள தேங்காயை எடுத்து அது நன்றாக இருந்தால் சமையலுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.

அல்லது வீட்டின் வாசலில் ஒரு மஞ்சள் துணியில் கட்டி விடலாம். ஒருவேளை சேதமடைந்திருந்தால் அந்த தேங்காயை பூஜை அறை குப்பையில் சேர்த்து விடலாம்.

கலச நீரை என்ன செய்வது

கும்பம் அல்லது கலசத்திற்குள் வைத்த தண்ணீரை மாவிலையை பயன்படுத்தி முதலில் வீட்டில் சமையல் அறையிலும், பிறகு மற்ற இடங்களிலும் தெளிக்க வேண்டும்.

இது புனிதமான நீர் என்பதால் கழிவறை, குளியல் அறை போன்ற இடங்களில் தெளிக்கக் கூடாது. வீட்டில் வாசல் உள்ளிட்ட மற்ற இடங்களில் தெளித்து விட்டு, மீதமுள்ள நீரை துளசி செடி அல்லது ஏதாவது மரத்தின் அடியில் ஊற்றி விடலாம்.

கால் படும் இடங்களில் மறந்தும் ஊற்றி விடக் கூடாது. ஒருவேளை மண் கலசத்தை வைத்து பூஜை செய்திருந்தால் அந்த கலசத்தை அப்படியே தோட்டத்தில் உள்ள மண்ணில் புதைத்து விடலாம்.

Back to top button