பெண்கள் இறுக்கமாக ஆடைகளை அணிவதால் கர்ப்பப்பைக்கு ஆபத்தா..?
பொதுவாக இன்றைக்கு பல பெண்கள் இறுக்கமான உடைகளை தேர்வு செய்து அணிகின்றனர். இது உடலுக்கு சில நோய்களை கொண்டு வந்து சேர்த்துவிடுகின்றது. உண்மையில் இறுக்கமான உடைகளை அணிவதனால் ஏற்படும் பக்கவிளைவுகள் என்ன என்பதை தெரிந்து கொள்வோம்.
இறுக்கமான உடைகள் அணிவதனால் என்ன நடக்கும்?
அதிக இறுக்கமான உடைகள் ரத்த ஓட்டத்தை தொடர்ந்து பாதிக்கும் போது உடலினுடைய வெப்பநிலை சீரமைப்பு, ரத்த உறைதல் போன்றவற்றில் மாற்றங்கள் ஏற்படுதல் மற்றும் மரத்து போதல் போன்ற உணர்வு மாறுதல்கள் ஏற்படுவதற்கு காரணமாகலாம்
இறுக்கமாக ஆடை அணிபவர்களுக்கு குறிப்பாக பேண்ட் போன்றவைகளால், இடுப்புக்கு கீழே உள்ள பகுதியில் ரத்த ஓட்டம் குறைவாக செல்லலாம். இது இயல்பாக உள்ள ரத்த ஓட்டத்தை பாதிக்கலாம்.
வயிற்றில் உள்ள குடல் எளிதாக இயல்பாக அசைவதற்கு இறுக்கமான ஆடைகள் அனுமதிக்காததால் நெஞ்சு எரிச்சல், பசியின்மை, வயிற்று வலி, அஜீரண கோளாறுகள் மற்றும் மலம் கட்டுதல் போன்றவை ஏற்படலாம்.
இறுக்கமாக அணியும் ஆடைகளால் இருதயம் குடல் ஆகியவற்றை கட்டுப்படுத்தும் ஆட்டோனாமிக் நரம்பு மண்டலமும் பாதிக்கப்படலாம். அதனால் பல்வேறு வகையான ஆரோக்கிய பிரச்சனைகள் ஏற்படலாம்.
கர்ப்பப்பைக்கு ஆபத்தா?
இறுக்கமான ஆடைகள் நேரடியாக கர்ப்பம் தரிப்பதற்கான வாய்ப்பை பாதிக்காது. இறுக்கமான ஆடை அணிந்து பல மணி நேரம் வேலை செய்யும் போது வியர்வையாலும் காற்று போகாமல் இருப்பதாலும் பூஞ்சை தொற்று ஏற்படுவதற்கு வாய்ப்பு உண்டு.
இது போன்ற தொற்றுகள் பிறப்பு பாதையை பாதிக்கும் போது அவர்களுக்கு கர்ப்பம் தரிப்பதற்கான வாய்ப்பினை மறைமுகமாக தாமதிக்கலாம்.