இலங்கை

யாழ் நிலாவில் 27 ஆம் திகதி பயணித்தவர்களுக்கு மகிழ்ச்சித்தகவல் – பயணகட்டணம் மீளப்பெறலாம்!

கடந்த வெள்ளிக்கிழமை (27) “யாழ் நிலா” ரயில் சேவையில், பயணித்த பயணிகளுக்கு ஒருவழி பயண கட்டணமான 4 ஆயிரம் ரூபாய் திரும்ப வழங்கப்படும் என ரயில்வே திணைக்களத்தின் பொது முகாமையாளரால் விடுக்கப்பட்டுள்ளது. வார இறுதிச் சேவையை விசேடமாக வழங்கவென கொழும்பு – காங்கேசன்துறைக்கு இடையில் ‘யாழ் நிலா’ என்ற பெயரில் ஒரு ரயில் சேவையைத் திணக்களம் ஆரம்பித்தது.
“யாழ் நிலா” ரயில் சேவையில் நபர் ஒருவருக்கு ஒருவழி கட்டணம் 4,000 ரூபாவாகும். வெள்ளிக்கிழமை (27) இரவு 10 மணிக்கு கல்கிஸையில் இருந்து புறப்படும் ரயில் சனிக்கிழமை காலையில் காங்கேசன்துறையை சென்றடையும்.

அதன்படி காங்கேசன் துறையிலிருந்து ஞாயிறு மாலை 9.30 மணிக்கு புறப்பட்டு திங்கள் காலை கல்கிஸை வரைப் பயணிக்கும். ரயிலின் என்ஜினில் ஏதோ திருத்தப்படுகின்றது என வௌ்ளிக்கிழமை (27) இரவு 10 மணியளவில் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் சுமார் மூன்றரை மணி நேரத்தின் பின்னர் அதிகாலை 1.30 மணிக்கு ரயில் வந்தது. புறப்பட்ட ரயில் நீண்ட இழுபறிக்கு பின்னர் காலை 7.30 மணியளவில் வவுனியாவுக்குச் சற்று தொலைவில் செயலிழந்தது. ஒருவாறு நகர்ந்து வவுனியா ரயில் நிலையத்தை காலை 8:30 மணிக்குச் சென்றடைந்துள்ளது. அத்தோடு சேவை தடைப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

குறித்த ரயிலில் வெள்ளவத்தையில் இருந்து பயணித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் வவுனியா நகருக்குப் போய், அங்கிருந்து இன்னொரு வாகனத்தில் யாழ் பயணமாகியுள்ளார். இதற்கிடையில் ரயில்வே பொது முகாமையாளர் டப்ளியு.ஏ.எஸ்.குணசிங்கவுடன் தொடர்புகொண்டு பயணிகள் அவலத்தை சுமந்திரன் எம்.பி எடுத்துரைத்துள்ளார்.

இந்நிலையில் பயணிகளுக்கு ஏற்பட்ட அசௌகரியங்களுக்கு மன்னிப்பு கேட்டுக்கொண்ட பொது முகாமையாளர் ‘யாழ் நிலா’வில் அன்றையதினம் பயணித்த அனைவருக்கும் அவர்களது டிக்கெட் கட்டணமான 4 ஆயிரம் ரூபாய் திரும்ப வழங்கப்படும் என்று உறுதியளித்துள்ளார்.

Back to top button