ஏனையவை

மீண்டும் உலகை அச்சுறுத்தும் புதிய மாறுபாட்டைக் கொண்ட கோவிட் வைரஸ்: எச்சரிக்கும் விஞ்ஞானிகள்

கொரோனாத் தொற்று நான்கு ஆண்டுகளுக்கு முன் 2019 ஆம் ஆண்டின் இறுதிப்பகுதியில் பரவத்தொடங்கி உலகையே ஆட்டம் காண வைத்தது கோடிக்கணக்கான மக்கள் இந்த நோய்த்தொற்றுக்குள்ளாகியும், லட்சக்கணக்கான மக்களின் உயிரைப்பறித்தும் உலகத்திற்கே மரண பயத்தை காண்பித்திருந்தது. நாளடைவில் அது திரிப்படைந்து உருமாறிய வைரஸ்களாக உருப்பெற்று கொரோனா அலைகளாக நோய்த்தொற்று பரவலாயிற்று, தடுப்பூசி பயன்பாடு, கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் உள்ளிட்ட விடயங்களை அறிமுகப்படுத்தி மக்கள் அதனைப்பின்பற்றி மெல்ல மெல்ல அந்த பேராபத்திலிருந்து உலகம் இப்போது மீண்டு வந்தது.

இந்நிலையில், பெருமூச்சு விட்டு ஓய்வதற்குள்ளே புதிய மாறுபாட்டைக் கொண்ட கோவிட் வைரஸ் இப்போது கண்டறியப்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். தடுப்பூசியால் உருவான நோயெதிர்ப்பு சக்தியை உடைக்கும் திறன் கொண்டதாக இந்த கோவிட் மாறுபாடு காணப்படுகிறது, இந்தப் புதிய மாறுபாடான JN.1 ஆனது கடந்த ஒகஸ்ட் மாதம் 25 ஆம் திகதியன்று லக்சம்பேர்க்கில் முதன் முறையாக அடையாளம் காணப்பட்டுள்ளது. பின்னர் இந்த JN.1 மாறுபட்ட திரிபானது இங்கிலாந்து, ஐஸ்லாந்து, பிரான்ஸ் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளிலும் கண்டறியப்பட்டுள்ள்ளது. XBB.1.5 மற்றும் HV.1 போன்ற பரவலான பிற கோவிட் விகாரங்களிலிருந்து இந்த மாறுபாடு முற்றிலும் வேறுபட்டதாக இருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர், மேலும் பிற கோவிட் விகாரங்களுடன் ஒப்பிடுகையில் இது மோசமான ஒன்றாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

மேலும், இந்த JN.1 ஆனது 41 வேறுபட்ட பிறழ்வுகளைக் கொண்டுள்ளது, மேலும் ஸ்பைக் புரதத்தினால் ஆன இந்தத் திரிபு பெரும்பான்மையான மாற்றங்களை வெளிப்படுத்துவது மாத்திரமல்லாமல், நோய் எதிர்ப்பு சக்தியைத் தவிர்த்து, நோய்ப்பரவல் அதிகரிக்கிறது என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த வைரஸ் பரவுவதைத் தற்போதுள்ள தடுப்பூசிகளால் தடுக்க முடியாது போகலாம் என நிபுணர்களால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது மிகவும் ஆபத்தான திரிபாக இருப்பதால் இது மிகவும் மோசமான விளைவுகளை ஏற்படுத்த வல்லது எனவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். எது எவ்வாறாயினும் இந்த புதிய கொரோனா மாறுபாடு அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்புக்கான மையத்தின் (CDC) புதிய மாறுபாடு தடுப்பூசி நோய் எதிர்ப்பு சக்தியிலிருந்து தப்பிக்க முடியாது என்று நம்பிக்கை தெரிவித்துள்ளது. இருப்பினும் மீண்டும் இன்னொரு கோவிட் அலைக்கான வாய்ப்புக்கள் அதிகமாக உள்ளதால் அனைவரும் எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Back to top button