இலங்கை பாடசாலை கல்வியில் ஏற்படவுள்ள மாற்றம் குறித்து கல்வி அமைச்சரின் அறிவிப்பு
மாணவர்களின் 2024இற்கான புத்தங்கள் தற்போது அச்சிடப்பட்டுள்ளன. சீரு டைகள் அடுத்த மாதம் 31 ஆம் திகதிக்கு முன்னதாக வழங்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். இதேவேளை, இலங்கையில் பாடசாலை கல்வியை டிஜிட்டல் மயமாக்க எதிர்பார்த்திருக்கின்றோம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் அண்மையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
மேலும் தெரிவிக்கையில், கோவிட் பரவலின் பின்னரான காலத்தில் ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசிலின் காரணமாக ஆரம்ப கல்வி நெருக்கடிகளை சந்திப்பதாக கல்வி நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். அது தொடர்பில் கவனம் செலுத்தியிருக்கிறோம். பாடசாலை கல்வியை டிஜிட்டல் மயமாக்க எதிர்பார்க்கிறோம். உலகம் தொழில்நுட்பத்துடன் முன்னோக்கிச் செல்லும் போது நமது பிள்ளைகளின் கல்வித் தேவையை தாமதப்படுத்த முடியாது. அதற்கு அவசியமான கல்வி மறுசீரமைப்புக்களை நாம் முன்னெடுத்து வருகின்றோம்.
இந்நிலையில், 2024இற்கான புத்தங்கள் தற்போது அச்சிடப்பட்டுள்ளன. சீருடைகள் அடுத்த மாதம் 31 ஆம் திகதிக்கு முன்னதாக வழங்கப்படும். அனைத்து பாடசாலை மாணவர்களுக்கும் மதிய உணவு வழங்கும் வேலைத்திட்டத்தையும் ஆரம்பிக்கவுள்ளோம். யுனெஸ்கோவுடன் இணைந்து பாடசாலை மாணவர்களுக்கு பல்வேறு உதவிகளை வழங்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளோம். யார் கல்வி அமைச்சராக இருந்தாலும் 4 வருடங்களுக்குள் அந்த உதவிகள் நாட்டுக்கு கிடைக்கும் என குறிப்பிட்டுள்ளார்.