இலங்கை

இலங்கையின் ஆடைக் கைத்தொழிற்சாலைகளுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை

இலங்கையின் ஆடை கைத்தொழில் துறை பாரிய பின்னடைவை சந்தித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறிப்பாக இலங்கையில் இயங்கி வரும் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான ஆடை கைத்தொழிற்சாலைகளில் அரைவாசிக்கும் மேற்பட்டவை மூடப்பட்டுள்ளதாக சுதந்திர வர்த்தக வலைய முதலீட்டாளர்கள் சம்மேளனம் தெரிவித்துள்ளது. இந்த சம்மேளனத்தின் பொதுச்செயலாளர் தம்மிக்க பெர்னாண்டோ இந்த விடயத்தை சுட்டிக்காட்டி உள்ளார். ஆடை உற்பத்தி செய்வதற்கான கோரிக்கைகள் குறைந்துள்ளதாகவும் உற்பத்திச் செலவு அதிகரித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.

வருமானம் சுமார் 25% அளவில் வீழ்ச்சி
தற்பொழுது ஆடை கைத் தொழில்துறையின் வருமானம் சுமார் 25% அளவில் வீழ்ச்சி அடைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதன் காரணமாக முதலீட்டாளர்கள் வேறும் நாடுகள் நோக்கி நகரத் தொடங்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ஏற்கனவே 10 பெரும் நிறுவனங்கள் பணியாளர்களுக்கு நட்ட ஈட்டை வழங்கி அவர்களை பணியில் இருந்து நீக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சில ஆடை கைத் தொழிற்சாலைகளில் பணியாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்படாது முழு அளவில் அல்லது பகுதி அளவிலான கொடுப்பனவு செலுத்தப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. எதிர்வரும் ஆண்டின் முதல் மூன்று மாத காலப்பகுதியில் பிரதான ஆடை கைத் தொழிற்சாலைகளில் 20 வீதமானவை மூடப்படக்கூடிய அபாயம் நிலவி வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

Back to top button