இலங்கை

பல கனவுகளுடன் வாழ்ந்த பல்கலைக்கழக மாணவி உறக்கத்திலேயே உயிரிழப்பு!

மொனராகலை உடுவெல பிரதேசத்தில் கடந்த 21 ஆம் திகதி காலை 5 மணியளவில் பல்கலைக்கழக மாணவி ஒருவர் உறக்கத்திலேயே உயிரிழந்துள்ளதாக மொனராகலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்துனி ஹன்சமலி பண்டார என்ற 22 வயதுடைய யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இவர் தனது தாயுடன் வசித்து வந்த நிலையில் இவரது தந்தை வேலை நிமித்தம் வெளிநாட்டில் வசிப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த பல்கலைக்கழக மாணவி அடிக்கடி சளிக்கு சிகிச்சை பெறுவதாகவும் வேறு எந்தவித சுகயீனமும் இல்லை எனவும் அவரது தாய் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

சம்பவம் நடந்த அன்று  அறைக்குள் சந்தேகத்திற்கிடமான முறையில் உறங்கிக்கொண்டிருந்த மகளை அவதானித்த தாய் , எழுப்ப முயற்சித்த போது மகள் மூச்சுப்பேச்சு இன்றி இருந்துள்ளார். இந்நிலையில், அயவர்களின் உதவியுடன் மகளை மொனராகலை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளார்.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மகளை பரிசோதித்த வைத்தியர்கள் அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

குறித்த மாணவி இரண்டு நாட்களில்  பல்கலைக்கழகத்திற்கு செல்ல இருந்தமையால் தேவையான உடைகள் மற்றும் பொருட்களை ஆசையாக வாங்கி ஆயத்தம் செய்துள்ளார்.

அத்தோடு,  தனது தாயிடம் தான் பல்கலைக்கழகம் செல்லும் நாளில் அழுதால் தாயை தனியாக விட்டு செல்ல மாட்டேன் எனவும் விரைவில் ஆசிரியராகி தாயை கவனித்துக் கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.

பிரேத பரிசோதனை கண்டி வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்டதோடு, மூளையில் இரத்தம் உறைந்தமையே மரணத்திற்கான காரணம் என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்த மரணம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மொனராகலை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

Back to top button