சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகள் வெளியாகியுள்ள நிலையில் யாழ். இந்துக் கல்லூரியின் வரலாற்று சாதனை
நாடளாவிய ரீதியில் இன்று அதிகாலை கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகள் வெளியான நிலையில் நாடளாவிய ரீதியில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்று சாதனைப் படைத்த மாணவர்கள் மற்றும் பாடசாலைகள் தொடர்பான விபரங்கள் வெளியாகி வருகின்றன.
இந்தநிலையில், யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மாணவர்கள் வரலாற்று சாதனையைப் படைத்துள்ளனர். பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களுள் 74பேர் 9A சித்திகளைப் பெற்று பாடசாலைக்கும் தமது பெற்றோருக்கும் பெருமை சேர்த்துள்ளனர். இதேவேளை, வெளியாகியுள்ள பெறுபேறுகளின் அடிப்படையில் அகில இலங்கை ரீதியில் கண்டியைச் சேர்ந்த மாணவி ஒருவர் முதலாம் இடத்தைப் பெற்றுக் கொண்டதுடன், யாழ். வேம்படி மகளிர் கல்லூரியின் மாணவி இரண்டாம் இடத்தைப் பெற்றுக்கொண்டுள்ளார்.
இந்நிலையில், 2022ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை கடந்த மே மாதம் 29ஆம் திகதி முதல் 10ஆம் திகதி வரை நடத்தப்பட்ட நிலையில், இந்த பரீட்சையில் 4 இலட்சத்து 72 ஆயிரத்து 553 மாணவர்கள் தோற்றியுள்ளனர். இதில், 3 இலட்சத்து 94,450 பேர் பாடசாலை பரீட்சார்த்திகள் எனவும் 78,103 பேர் தனியார் பரீட்சார்த்திகள் எனவும் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேலும், 13,588 மாணவர்கள் 9A சித்திகளைப் பெற்றுள்ளதுடன், 72.7 சதவீதமான மாணவர்கள் உயர் தரத்திற்கு தகுதிப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.