தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் ஒரு நேர்மையான தலைவர்: சர்ச்சையை ஏற்படுத்திய காணொளிக்கு கமால் குணரத்ன பதிலடி
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் கொள்கைகளில் தனக்கு உடன்பாடு இல்லை என்ற போதும், அவர் ஒரு நேர்மையான தலைவர் என பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் மகள் துவாரகாவின் உரை அடங்கியதாக கூறப்படும் காணொளியொன்று அண்மையில் வெளியாகியிருந்தது. இந்த காணொளி பல்வேறு தரப்பினர் மத்தியிலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது.
இந்நிலையில் குறித்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு நிகராகத் தமிழர்கள் தரப்பில் இனி எவருமே வர முடியாது. இந்த வீடியோ புலம்பெயர் தமிழர்களின் ஒரு குழுவால் திட்டமிட்டுத் தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வீடியோவுக்கும் இலங்கைப் புலனாய்வுப் பிரிவினருக்கும் இடையில் எந்தவித தொடர்பும் இல்லை. அந்தப் போலி வீடியோவுக்கும் வெளிநாட்டு அரசாங்கங்களுக்கும் இடையில் தொடர்பு இருக்கும் என்று என்னால் கூற முடியாது. அதேவேளை, தொடர்பு இல்லை என்றும் என்னால் கூற முடியாது.
ஆனால், இதன் பின்னணியில் புலம்பெயர் தமிழர்களின் ஒரு குழு திட்டமிட்டுச் செயற்பட்டுள்ளது என்பது நூறு வீதம் உண்மை. 2019ஆம் ஆண்டு இடம்பெற்ற இறுதிப் போரில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனும் அவரின் குடும்பத்தினரும் உயிரிழந்து விட்டனர். அவர்களை வைத்து இனி எவரும் அரசியல் செய்ய முடியாது. அது அவர்களை அவமானப்படுத்தும் செயல். பிரபாகரனின் கொள்கைகளில் எனக்கு உடன்பாடு இல்லை. ஆனால், அவர் நேர்மையான ஒரு தலைவர். இறுதி வரைப் போராடிய ஒரு தலைவர் என குறிப்பிட்டுள்ளார்.