வித்தியா கொலை வழக்கு: மேன்முறையீடுகளை விசாரிக்க திகதியிட்டுள்ள உயர்நீதிமன்றம்
யாழ்ப்பாணம் – புங்குடுதீவு சிவலோகநாதன் வித்தியா கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளவர்களின் மேன்முறையீடுகளை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள உயர்நீதிமன்றம் திகதியிட்டுள்ளது. இந்த மேன்முறையீட்டு மனுக்கள் நீதியரசர்களான ப்ரீத்தி பத்மன் சூரசேன, அச்சல வெங்கப்புலி மற்றும் ஷிரான் குணரத்ன ஆகிய மூவரடங்கிய உயர் நீதிமன்ற நீதியரசர்கள் ஆயம் முன்னிலையில் இன்று (09.01.2024) அழைக்கப்பட்டது.
2015இல் இடம்பெற்ற கொலை
2015ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் – புங்குடுதீவு பகுதியில் சிவலோகநாதன் வித்தியா என்ற மாணவி கூட்டுப் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் 7 எதிரிகளுக்கு மரண தண்டனை வழங்கப்பட்டிருந்தது.
இந்த நிலையிலேயே தற்போது மேன்முறையீடுகளை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள திகதியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. அதன்போது, இந்த வழக்கு தொடர்பான சிங்கள மொழிபெயர்ப்பு பிரதிகளை சட்டமா அதிபரிடம் சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்குமாறு மனுதாரர்களுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து, குறித்த மேன்முறையீட்டு மனுகளை எதிர்வரும் 22 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்வதற்கு நீதியரசர்கள் ஆயம் தீர்மானித்துள்ளது.