இலங்கை

இலங்கை மக்களுக்கு வற் வரி அதிகரிப்பால் ஏற்பட்டுள்ள மற்றுமொரு ஆபத்து

இலங்கையில் பணவீக்கம் தொடர்ந்து அதிகரித்தால் மக்களின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்ய முடியாத பாரதூரமான நிலை உருவாகும் என பொருளாதார ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.

வற் வரி அதிகரிப்பினால் ஏறக்குறைய 2.5 வீத பணவீக்க வீதத்தை நாம் எதிர்கொள்ள நேரிடும் என மத்திய வங்கியின் பொருளாதார ஆய்வுப் பிரிவு கணித்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார்.

இதனால் இலங்கையில் பணவீக்கம் உடனடியாக 6.4 சதவீதமாக உயரும் என எதிர்பார்க்கலாம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இது தொடர்பில் வினவிய போது, ​​பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதார மற்றும் புள்ளியியல் கற்கைகள் பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரல, இதன் காரணமாக மக்களின் வாழ்க்கைச் செலவு மேலும் அதிகரிக்கும்.

ஏற்கனவே எதிர்நோக்கும் நெருக்கடிகள் மேலும் உக்கிரமடையும் என குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, வரி அதிகரிப்பு பணவீக்க அதிகரிப்பை நேரடியாகப் பாதித்துள்ள நிலையில், மக்களிடமிருந்து அறவிடப்படும் வரிப் பணத்தை மக்களின் குறுகிய கால அல்லது நீண்டகால நலனுக்காக திறம்பட பயன்படுத்துவதில் அரசாங்கம் அதிக கவனம் செலுத்த வேண்டும் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளாதாரப் பிரிவின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி பிரியங்க துனுசிங்க தெரிவித்துள்ளார்.

வரிகளை உயர்த்துவதுடன் செலவுகளை நிர்வகிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்ததாகத் தெரியவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாடு எதிர்நோக்கும் நிலைமை மற்றும் ஏற்பட்டுள்ள நெருக்கடிகளை கருத்திற்கொண்டு அரசாங்கம் வரிகளை உயர்த்தியுள்ளதால், இந்த நேரத்தில் மக்களுக்கும் பொறுப்பு இருப்பதாக கலாநிதி பிரியங்க துனுசிங்க சுட்டிக்காட்டினார்.

Back to top button