நாட்டில் பாடசாலை ஆரம்பமானதும் பாரிய போராட்டம்: ஜோசப் ஸ்டாலின் எச்சரிக்கை
பாடசாலை ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் பாரிய போராட்டம் வெடிக்கும் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் சம்பளங்கள் இருபதாயிரம் ரூபாவினால் உயர்த்தப்பட வேண்டுமென அவர் கோரிக்கை விடுத்துள்ளார். பாடசாலை பிள்ளைகளது பெற்றோர் மீது தேவையற்ற வகையில் கல்விச் செலவுகள் திணிக்கப்படுவதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார். இந்தக் காரணிகளின் அடிப்படையில் அடுத்த பாடசாலை தவணை ஆரம்பமானதும் பாரியளவு போராட்டம் வெடிக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
பாடசாலைகளின் மின்சாரக் கட்டணத்தை பாடசாலை அபிவிருத்தி சபையின் ஊடாக மறைமுகமாக பெற்றோர் மீது அரசாங்கம் திணித்துள்ளதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார். அதிபர்கள், ஆசிரியர்களின் சம்பளங்களை 20, 000 ரூபாவினால் உயர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அரசாங்கத்திடம் பல்வேறு சந்தர்ப்பங்களில் கோரிக்கை விடுக்கப்பட்ட போதிலும் உரிய பதில் கிடைக்கவில்லை என அவர் குற்றம் சுமத்தியுள்ளார். பாடசாலை பிள்ளைகளின் பாதணிகள், அப்பியாசப் புத்தகங்கள் மற்றும் ஏனைய கற்றல் உபகரணங்கள் தாங்கிக் கொள்ள முடியாத அளவில் அதிகரித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.