ஆன்மிகம்

ஷீரடி சாய் பாபா

கலியுகத்தில் கேட்டவர்க்கு கேட்டவரத்தை உடனே அளிக்கும் வள்ளலாகத் திகழும் ஷீரடி பாபாவை ஒரு முறை நினைத்தாலே போதும், ஒன்பது தலைமுறையில் செய்த பாவங்கள் தீரும். ஷீரடி நோக்கி ஓரடி வைத்தாலே உங்கள் உள்ளத்தில் உள்ள துயரங்கள் யாவும் தூசியாகப் பறக்கும்.

பாபாவின் உருவம் ஓர் அற்புதம்: கால் மேல் கால் போட்டு அமர்ந்த நிலையில் காட்சிதரும் பாபாவின் உருவ அமைப்பு மிகவும் ஆற்றல் வாய்ந்ததாக அவரது பக்தர்களால் பூஜிக்கப்படுகிறது. அவர் தமது வலது காலை, இடது முழங்கால் மீது போட்டு தனது இடது கையினை வலது கால் பாதத்தின் மீது படரவிட்டுள்ளார். பாபாவின் இடது கை ஆள் காட்டி விரலுக்கும், நடு விரலுக்கும் நடுவே உள்ள வலது கால் பெருவிரலை இரண்டு மரக்கிளைக்கு நடுவே சூரியனைப் பார்ப்பது போல தரிசித்து பாபாவின் ஒளியைப் பெறலாம்.

மேலும் பாபாவின் பாதங்களை நமது கண்ணீரால் கழுவுவதாக மனதளவில் நினைத்தால் இதயம் தூய்மை அடையும் என்றும், அன்பை சந்தனமாக பூசச் சொல்லியும், நமது நம்பிக்கையை பாபாவின் மேலாடையாகவும் கருதச் சொல்கிறார். நமது சிரசை பாபாவின் பாதத்தில் வைத்து வணங்கிய பின்னர், நமது பக்தியை சாமரமாகக் கொண்டு வீசி, பாபாவின் வெப்பத்தைத் தணிக்க வேண்டும். அதுவே சிறந்த பாபா வழிபாடு.

உதியே மருந்து!

ஷீரடி நாதனின் பரம பக்தரான ஒருவரது மனைவி, பிரசவம் ஆன இரண்டு நாள் கழித்து திடீரென்று வயிறு உப்பி மூச்சு விடமுடியாமல் கஷ்டப்பட்டார். பிரசவம் பார்த்த பெண் மருத்துவர், அந்தப் பெண்மணியை உடனடியாக வேறு பெரிய மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லுமாறு சொல்லிவிட்டார். அதைக் கேட்டு கூடியிருந்த அனைவரும் அழ ஆரம்பித்து விட்டனர். அந்த சமயத்தில் அந்தப் பெண்ணின் கணவரான பக்தர், பாபா, தயவு செய்து எனது மனைவியைக் காப்பாற்று! என்று சத்தம்போட்டு பிரார்த்தித்தார். பின்னர் தன் மனைவியின் வலது மணிக்கட்டில் புனித கயிறைக் கட்டி, உப்பிய வயிற்றுப் பகுதியில் சிறிது உதியைத் தடவினார். கொஞ்சம் உதியை அவரது வாயில் இட்டார். இது நடந்த ஐந்து நிமிடத்தில் உப்பியிருந்த வயிறு மீண்டும் சகஜ நிலைக்கு வந்து விட்டது. அந்தப் பெண் சீராக கவாசிக்கத் தொடங்கினாள். சாயிநாதன் மீது நம்பிக்கை வைத்து சரணாகதி அடைந்தவரை அவர் ஒருபோதும் கைவிடமாட்டார். அவரது உதியே மருந்தாக விளங்கும் என்பதை எல்லோரும் உணர்ந்தார்கள்.

ராமரும் ஸாயியே!

மண்மாடு என்னும் ஊரிலிருந்த ஒருவரைக் காண அவரது நண்பர் ஒருவர் தென்னாப்பிரிக்காவில் இருந்து வந்திருந்தார். வந்தவர், தென்னாப்பிரிக்காவில் புகழ்பெற்ற டாக்டர். அவரை ஷீரடி சென்று பாபாவை தரிசித்து வரலாம் என்று நண்பர் அழைத்தார். வந்திருந்த டாக்டரோ தீவிரமான ராமபக்தர். ஆதலால் நான் ராமனைத் தவிர வேறு எந்த தெய்வத்தையும் தரிசிப்பதில்லை. என்னால் பாபாவை தரிசிக்க வர இயலாது என்று மறுத்தார்.

அந்த நண்பர் விடவில்லை. எனக்காக தாங்கள் கட்டாயம் வரவேண்டும் நாம் காரிலேயே போகலாம். அங்கு உங்களுக்கு வர விருப்பமில்லை என்றால் காரிலேயே உட்கார்ந்து கொள்ளுங்கள். நான் மட்டும் உள்ளே சென்று சாயிநாதனை தரிசித்து விட்டு வருகிறேன். வழித்துணையாக மட்டும் என்னுடன் வந்தால் போதும் என்றார். டாக்டரும் ஒப்புக்கொண்டார். ஷீரடியில் பாபா இருந்த மசூதி வாசலில் காரை நிறுத்திவிட்டு, உள்ளே சென்றார் பக்தர். டாக்டர் நண்பர் காரிலேயே இருந்தார். கொஞ்சநேரம் சென்றதும் நண்பர் வருகிறாரா என அறிய, காரில் இருந்தபடியே மசூதியின் உள்ளே பார்த்த டாக்டர், அங்கே சாட்சாத் ராமனே அமர்ந்திருந்ததைக் கண்டார். கண்களை கசக்கி மீண்டும் பார்க்க, அதே காட்சி, உடனே காரிலிருந்து இறங்கி ஓடி, பாபாவின் காலில் விழுந்து ஹே சாய்ராம் என்று கதறி வணங்கினார். எல்லா தெய்வமும் நானே என்று பாபா சொல்வது உண்மையே என்பதை உணர்ந்து வணங்கி ஆசி பெற்றுத் திரும்பினார்.

ஷீரடி சாய்பாபாவின் உபதேசங்கள்!

ஷீரடி தலத்தை எவன் மிதிக்கிறானோ, அவனுடைய துன்பம் முடிவுக்கு வந்துவிடும். அவன் அதன் பின்னர் பூரண சவுகரியத்தை அடைகிறான்.

பெரும் துன்பத்திற்கு உள்ளானவர்களும் துவாரகாமாயியை அடைந்த மாத்திரத்தில் மிகுதியான சந்தோஷத்தை அடைவார்கள்.

இவ்வுலகை விட்ட பிறகும் நான் சர்வ சக்தியுடன் வேலை செய்வேன்.

என்னுடைய சமாதி என் பக்தர்களுக்கு அநேக ஆசீர்வாதங்களையும், புத்திமதிகளையும் கொடுக்கும்.

என்னுடைய பூத உடல் என் சமாதியிலிருந்து பேசும்.

என்னுடைய சமாதியிலிருந்து கொண்டே நான் மிகவும் சுறுசுறுப்பாகவும், தீவிரமாகவும் இருப்பேன்.

என்னிடம் வருபவர்களுக்கும், என்னை தஞ்சம் அடைந்தவர்களுக்கும், என் உபதேசத்திற்காக என்னிடம் தீவிர நம்பிக்கை உள்ளவர்களுக்கும் நான் எப்பொழுதும் உயிருடன் இருக்கிறேன்.

நீ என்னை அடைந்தால் நான் உன்னை கடாட்சிக்கிறேன்.

நீ என் பேரில் உன் பளுவை சுமத்தினால் நான் நிச்சயமாக அதைத் தாங்குவேன்.

நீ என் உபதேசத்திற்காகவும், உதவிக்காகவும் என்னை அடைந்தால் அவற்றை உடனே நான் உனக்குக் கொடுப்பேன். என்னுடைய பக்தர்கள் வீட்டில் ஒருபோதும் தேவை என்பதே இருக்காது.

பாபாவின் மூல மந்திரம்!

ஓம் ஐம் ஹ்ரீம் க்லீம் ஸ்ரீம் நமோ பகவதே
ஸர்வலோக ஹிதங்கராய, ஸர்வதுக்க வாரகாய
ஸர்வாபீஷ்ட பலப்ரதாயினே சமர்த்த சத்குரு சாயிநாத்
ஸ்வாமினே வரவ-ரத ஸர்வ ஜனம்மே வசமானய ஸ்வாஹாசாயிபாபாவின் பன்னிரு திருப்பெயர்கள்!

லோகத்ரய குரவே நமஹ, ஸர்வ பூஜிதாய நமஹ, ஸர்வஜிதே நமஹ, நீதிகர்த்தரே நமஹ, ஸர்வேசாய நமஹ, தயாவதே நமஹ, விச்வாத்மனே நமஹ, மகாபலாய நமஹ, சுபலக்ஷணாய நமஹ, மதிமதே நமஹ, ஸர்வாபீஷ்டதாய நமஹ, பரமகுருவே நமஹ

ஷீரடி சாயிபாபாவின் இந்தப் பன்னிரு நாமாக்களை நேரம் கிடைக்கும்போதெல்லாம் சொல்லிவர, மனதில் நிம்மதி நிறையும்.

ஷீரடியில் உள்ள சாயிபாபா பளிங்கு சிலை உருவான விதம்!

1918- ம் வருடம் விஜயதசமி அன்று, சாயிபாபா மஹாசமாதியடைந்தார். நாக்பூரை சேர்ந்த செல்வந்தரும், பாபாவின் அடியவருமான ஸ்ரீமான்புட்டி அவர்களால் கட்டப்பட்ட வாதாவில், முரளி கிருஷ்ணர் சிலை பிரதிஷ்டை செய்வதற்காக அமைக்கப்பட்ட மேடையில் பாபாவின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. பாபாவின் சமாதிக்கு முன்பு, அவரது பெரிய புகைப்படம் ஒன்றை வைத்து, நான்கு கால ஆரத்தியுடன் நித்திய பூஜைகள், கிரமமாக நடந்து வந்தன. விசேஷ நாட்களில் சிறப்பு பூஜைகளும், பாபாவின் படத்தோடு ஊர்வலங்களும், அன்ன தானங்களும் விமரிசையாக நடந்தன.

முப்பத்தாறு வருடங்களாக பாபாவின் புகைப்படத்தை வைத்துதான் பூஜை செய்து வந்தனர். அப்பொழுது ஒரு நாள் இத்தாலியில் இருந்து அருமையான, உயர்ந்த வகை வெள்ளை பளிங்குக் கல் ஒன்று பம்பாய் துறைமுகத்திற்கு இறக்குமதி ஆனது. அது அப்பொழுது எதற்கு வந்தது, ஏன் வந்தது என்று யாருக்கும் தெரியாது. அதை இறக்குமதி செய்தவரும் அதை வாங்க வரவில்லை. உடனே துறைமுக அதிகாரிகள் அதனை ஏலத்தில் விட ஏற்பாடு செய்தனர். இந்த விஷயம், ஷீர்டி சாயி சமஸ்தான் அதிகாரிகளுக்குத் தெரியவந்தது. உடனே அதை ஏலத்தில் எடுக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன. ஷீர்டி சாயிபாபா சிலை செய்வதற்காக ஏலம் எடுக்கப்படுவதை அறிந்து, பலரும் போட்டியிலிருந்து விலகினார்கள். சாயி சமஸ்தான் அதிகாரிகள் அந்த கல்லை ஏலத்தில் எடுத்து அதை பம்பாயில் உள்ள பாலாஜி வஸந்த் தாலிம் என்னும் சிற்பியிடம் கொடுத்து பாபாவின் சிலையை செய்யச் சொன்னார்கள்.

சிலை செய்ய மாதிரியாக, பாபாவின் கருப்பு வெள்ளை புகைப்படமே சாயி சமஸ்தான் அதிகாரிகளால் கொடுக்கப்பட்டது. .அந்தப் புகைப்படம் தெளிவாக இல்லாததால் சிற்பி தாலிம் சிலை செய்ய மிகவும் சிரமப்பட்டார். அப்பொழுது பாபா சிற்பியின் கனவில் தோன்றி அவருடைய முகத்தை பலவித கோணங்களில் காட்டி சிற்பியின் கஷ்டத்தைப் போக்கி அவரை உற்சாகப்படுத்தினார். சிற்பி பின்னர் தெளிவு பெற்று மிகவும் சிறப்பாக எல்லோரும் எதிர்பார்த்தது போல், அனைவரும் திருப்தியுறும் வண்ணம் சிலையை மிகவும் அழகாகச் செய்து கொடுத்தார். பின்னர் அந்த சிலை 1954-ம் ஆண்டு, அக்டோபர் மாதம், 7-ம் தேதி பாபாவின் சமாதிக்கு முன்னால் பிரதிஷ்டை செய்யப்பட்டது. அந்த சிலையே இன்றளவும் தினமும் பல லட்ஷக்கணக்கான பக்தர்களால் அன்புடனும், பக்தியுடனும் வழிபடபட்டு வருகின்றது. ‘ எனது பக்தன் எவ்வளவு தூரத்திலிருந்தாலும், என்னிடமிருந்து மூவாயிரம் மைல்களுக்கப்பால் இருந்த போதும், காலில் நூல் கட்டியுள்ள சிட்டுக்குருவி இழுக்கப்படுவதைப்போன்று அவன் ஷீர்டிக்கு இழுக்கப்படுவான். ‘ ‘ஷீர்டி மண்ணை எவனொருவன் மிதிக்கிறானோ, அவனுடைய துன்பங்கள் முடிவுற்று மிகுதியான ஆனந்தத்தை அடைகிறான்.‘ – பாபா அனந்தகோடி ப்ரம்மாண்ட நாயகா ராஜாதிராஜ யோகிராஜ பரப்ரம்மோ ஸ்ரீஸச்சிதானந்த சத்குரு சாய்நாத் மஹராஜ் கீ ….. ஜெய்.

Back to top button