இலங்கை

முல்லைத்தீவு மாவட்டத்தில் வழிமாறும் தனியார் கல்வி நிலையங்கள் தொடர்பில் வெளியான தகவல்

முல்லைத்தீவில் மாவட்டத்தில் உள்ள தனியார் கல்வி நிலையங்கள் பொறுப்புவாய்ந்த கல்விசார் நிறுவனங்களால் மேற்பார்வை செய்யப்படுவதில்லை என குற்றம் சாட்டப்படுகின்றது.

மாணவர்களுக்கு பொறுப்புவாய்ந்த முன்னுதாரணமான செயற்பாடுகளை அவை முன்னெடுப்பதில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள கல்வி நிலையமொன்றின் செயற்பாடுகள் தொடர்பில் சமூக ஆர்வலர்களை குற்றம் சாட்டுகின்றனர். இது போல் பல தனியார் கல்விநிலையங்களிலும் நெறிமாறிய செயற்பாடுகள் இருப்பதும் நோக்கத்தக்கது.

பாடசாலைகளின் கல்விச் செயற்பாடுகளுக்கு ஒத்திசைந்து செயற்படுபவையாகவே தனியார் கல்வி நிலையங்களின் செயற்பாடுகள் இருக்க வேண்டும். எனினும் அவை பாடசாலைகளுடன் ஒத்திசைவதில்லை என்ற குற்றச்சாட்டும் இருக்கின்றது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள கல்வி நிலையம் ஒன்றின் செயற்பாடுகள் பலராலும் விமர்சிக்கப்படுகின்றது.

விடுமுறை கால சுற்றுலாப் பயணத்தினை ஒழுங்குபடுத்தியிருந்த அந்த கல்வி நிலையம் சுற்றுலாவுக்காக ஏற்பாடு செய்திருந்த பேருந்திற்காக கொடுக்க வேண்டிய பணத்தினை வழங்காது தவிர்ந்து வருகின்றது.

200 கிலோமீற்றர் பயணத் தூரத்தினை கொண்ட இந்த சுற்றுலா பயணத்தில் கல்வி நிலையத்தின் உயர்தர மாணவர்கள் ஐம்பது பேர் கலந்துகொண்டுள்ளனர்.

ஒரு மாணவரிடம் ரூபா மூவாயிரம் பெற்றுக்கொண்ட போதும் பேருந்துக்கான செலவாக ரூபா ஐம்பத்தையாயிரம் உடன்பாடெய்திய போதும் அந்த பணத்தினை வழங்காது ஏமாற்றிவருவதாக குற்றம் சாட்டப்படுகின்றது.

சுற்றுலாவின் போது வீதிப் போக்குவரத்து பொலிஸாரால் பேருந்து தடுக்கப்பட்டு மேற்கொள்ளப்பட்ட வீதி விதிமீறல் செயற்பாடொன்றுக்கான விசாரணையின் போது ஏற்பட்ட தாமதத்தினால் பேருந்திற்கான சாரதியை மாற்றி ஏற்பாடு செய்து கொடுத்த போதும் அந்த பேருந்தை இடைநடுவில் கைவிட்டு மற்றொரு பேருந்தினை ஏற்பாடு செய்துள்ளார் கல்விநிலைய உரிமையாளர்.

சுற்றுலாவின் ஏற்பாட்டுகளுக்கமைய பயணத்தூரத்தின் பெரும்பகுதியை பூர்த்தி செய்தவர்கள் சுற்றுலாவினை முடித்து திரும்பும் போதே இந்த நிகழ்வுகள் நடைபெற்றுள்ளன.

ஒழுங்கமைப்பின் படி பேருந்தினை மாற்றி பயணப்படும் நிலையினை எடுத்திருந்த கல்வி நிலையத்தினர் ஆரம்ப பயணத்திற்கான கட்டணத்தினை முதல் பேருந்துக்கு வழங்கியிருக்க வேண்டும். அதன் பின்னரே புதிய பேருந்தினை ஏற்பாடு செய்து பேருந்தை மாற்றி பயணத்தை தொடர்ந்திருக்க வேண்டும். எனினும் இத்தகைய யதார்த்தமான நியாயமான நடத்தையை அந்த கல்விநிலையம் பின்பற்றாதது சமூக ஆர்வலர்கள் இடையே விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆரம்ப பயணத்திற்கான பேருந்தின் சாரதி உடன் மாற்று சாரதியை ஏற்பாடு செய்துள்ள போதும் அவரது ஏற்பாடுகளை அசட்டை செய்து விட்டு; அவர் ஏற்பாடு செய்திருந்த சாரதியை கொண்டே, மற்றொரு பேருந்தினை ஏற்பாடு செய்திருந்தனர் என முதல் பேருந்தின் சாரதி தன் ஆதங்கத்தினை வெளிப்படுத்தி இருந்தமையும் நோக்கத்தக்கது.

பொலிஸார் அரைமணி நேரத்தில் பயணத்தை தொடரலாம் என அறிவுறுத்தி உள்ள போதும் கல்வி நிலையத்தினர் அதனை கருத்திலெடுக்காது சுற்றுலாவினை முடித்து திரும்பும் போது நியாயமற்ற முறையில் நடந்து கொண்டனர் என அறிய முடிகின்றது.

நாட்டின் நாளைய அறிவியல் வளம்
நாளைய சமூகத்தின் உறுப்பினர்களாக மாறும் இன்றைய மாணவர்கள் இந்த செயற்பாட்டினை உற்று நோக்கி வளரும் போது அவர்களும் இதுபோலவே செயற்பட முனைவார்கள். இத்தகைய முனைப்பு ஊழல் நிறைந்த அதிகாரிகளையே தோற்றுவித்து விடும்.

இன்றைய இலங்கையின் பொருளாதார வீழ்ச்சிக்கு ஊழல் நிறைந்த அரசியல் அணுகலும் பொறுப்பற்று எடுக்கப்பட்ட தீர்மானங்களுமே காரணமாகி இருக்கின்றன.

ஆறாண்டுகளுக்கொருமுறை மாற்றம் பெறும் ஆட்சியில் உள்ள இலங்கை அரசாங்கம் எடுத்த பொருத்தமற்ற முடிவுகள் நிரந்தரமாக நிலைத்திருக்கும் இலங்கை அரசினை பாதிக்கும் என்பது கூட அரசின் கூறுகளாக இருக்கும் அரசு அதிகாரிகளுக்கு தெரியவில்லை. தெரிந்திருந்தால் அரசாங்கத்தின் பொருத்தமற்ற கொள்கைகளுக்கு தங்கள் எதிர்ப்பினை வெளிப்படுத்தி விபத்தினை தடுத்திருக்க முயன்றிருப்பார்கள் என சமூகவிடய ஆய்வாளர் ஒருவர் சுட்டிக்காட்டுகின்றார்.

கல்வி நிறுவனங்கள் தங்கள் செயற்பாட்டில் பொறுப்புவாய்ந்த நியாயமான செயற்பாடுகளை வெளிப்படுத்தும் போது அதனை பின்பற்றி வளரும் மாணவர்கள் வளமான எதிர்காலம் உள்ள நாட்டின் அறிவியல் வளமாக இருப்பார்கள் என்பது திண்ணம்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள கல்வி நிலையங்களின் பொறுப்பற்ற செயற்பாடுகள் தொடர்பில் சமூக விடய ஆய்வாளர் தன் விசனத்தையும் வெளிப்படுத்தியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கல்வி நிலையங்களை யார் கண்காணிப்பது?
முல்லைத்தீவு மாவட்டத்தின் பல கல்விநிலையங்களில் நெறிமாறிய செயற்பாடுகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக பெற்றோர் மற்றும் மாணவரிடையே மேற்கொண்ட தேடலின் போது அறிய முடிகின்றது.

கல்வி நிலையங்கள் தமக்கென பொதுவான விதிமுறைகள் கொண்ட எந்த சட்டங்களையும் வைத்திருக்கவில்லை. மாவட்டத்தின் எந்தவொரு பொறுப்புவாய்ந்த நிறுவனங்களாலும் தனியார் கல்வி நிலையங்கள் கண்காணிக்கப்படுவதில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆரோக்கியமான மாற்றங்களை ஏற்படுத்துவதற்கு சிறந்த கல்வி முறை வேண்டும் என்பதோடு நேர்த்தியான தொடர்ச்சியான நெறிவழி பழக்கம் வழக்கமாவதும் அவசியம்.

முல்லைத்தீவு கல்வி வலயமோ அல்லது பிரதேச செயலகங்களோ மாவட்ட செயலகங்களோ இங்கே கல்வி நிலையங்களின் செயற்பாடுகளை ஒழுங்குபடுத்த முனையவில்லை.

தனியார் கல்வி நிலையங்களை கல்வி சார் அதிகாரிகளே கண்காணிக்க வேண்டும். அப்போது தான் மாணவர்கள் இலக்கு நோக்கி நடத்தப்படுவார்கள் என்பதும் நோக்கப்பட வேண்டும்.

இவை மாணவர்களின் ஆற்றல்களை நன்கு அறிந்து அவர்களை நாளைய சமூகத்தின் சவால்களை எதிர்கொண்டு வாழும்படி மாற்றியமைத்து நெறிப்படுத்த உதவவில்லை என சுட்டிக் காட்டப்படுகின்றது.

இலங்கையின் கல்வித்திணைக்களத்தின் கல்விக் கொள்கைக்கு ஏற்ப அவை செயற்பட்டாலொழிய இலங்கையின் கல்வித் திணைக்களத்தின் கல்விக்கொள்கைக்கு ஏற்ப செயற்படும் பாடசாலைகளுடன் தனியார் கல்வி நிலையங்களின் செயற்பாடுகள் ஒத்திசைந்து போகாது.

உரிய தரப்பினர் முல்லைத்தீவு மாவட்டத்தின் தனியார் கல்விநிலையங்களின் செயற்பாடுகளை கண்காணித்து ஒரே நேர்கோட்டில் அவற்றின் செயற்பாடுகளை கொண்டுவர வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக இருப்பதும் நோக்க வேண்டிய விடயமாகும்.

Back to top button