இலங்கை

கொழும்பு லேடி ரிட்ஜ்வேயில் சத்திர சிகிச்சையில் உயிரிழந்த குழந்தை – கொலை என குற்றச்சாட்டு

கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 03 வயது குழந்தையொன்று சிறுநீரக சத்திரசிகிச்சைக்கு பின்னர் உயிரிழந்த சம்பவம் கொலை என பாதிக்கப்பட்டோர் சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி பைசர் முஸ்தபா குற்றஞ்சாட்டி உள்ளார். இது தொடர்பில் பொலிஸார் நியாயமான விசாரணையை மேற்கொள்ளவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கொழும்பு நீதவான் நீதிமன்றில் கொழும்பு மேலதிக நீதவான் ஹர்ஷன கெகுனுவல முன்னிலையில் இன்று (21.2.2024) நடைபெற்ற வழக்கு விசாரணையின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அப்போது, ​​பாதிக்கப்பட்டோர் தரப்பு சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி பைசர் முஸ்தபா, நீதிமன்றத்தில் சமர்பணங்களை முன்வைத்து, இந்த சம்பவத்தில் உயிரிழந்த குழந்தை இரண்டு சிறுநீரகங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும், சத்திரசிகிச்சையின் பின்னர் இரண்டு சிறுநீரகங்களும் அகற்றப்பட்டதாகவும் குற்றம் சுமத்தினார். சம்பவத்துடன் தொடர்புடைய வைத்தியர்கள் வெளிநாட்டிற்கு தப்பிச் சென்றுள்ளதாக குற்றம் சுமத்திய ஜனாதிபதி சட்டத்தரணி, இது முழுக்க முழுக்க கொலை என தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் தமது தரப்பினர் பொலிஸில் முறைப்பாடுகளை சமர்ப்பித்துள்ள போதிலும், பொலிஸார் இதுவரை விசாரணைகளை மேற்கொள்ளவில்லை எனவும் ஜனாதிபதி சட்டத்தரணி குற்றம் சுமத்தியுள்ளார்.

நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தால் சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை முன்னெடுப்போம் என பொரளை பொலிஸ் அதிகாரிகள் இதன்போது நீதிமன்றில் தெரிவித்துள்ளனர். இவ்வாறான விசாரணைக்கு நீதிமன்ற உத்தரவு அவசியாமா? என கேள்வி எழுப்பிய நீதவான், சம்பவத்துடன் தொடர்புடைய அனைத்து தரப்பினரையும் விசாரிக்குமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.

Back to top button