இலங்கைஇந்தியாவிளையாட்டு

இந்திய அணியின் வெற்றி – இலங்கை முன்னாள் வீரர்களின் பாராட்டை பெற்ற ரோஹித் சர்மா!

இலங்கை – இந்திய அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி நேற்றையதினம் இடம்பெற்றிருந்தது

முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்களை இழந்து 373 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

துடுப்பாட்டத்தில் இந்திய அணி சார்ப்பில் விராட் கோலி 113 ஓட்டங்களையும் அணித் தலைவர் ரோஹித் சர்மா 83 ஓட்டங்களையும் சுப்மன் கில் 70 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்களை இழந்து 306 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டது.

இதன் அடிப்படையில் முதல் ஒருநாள் போட்டியை 67 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்திய வெற்றிகொண்டுள்ளது.

இலங்கை அணி சார்ப்பில் இறுதி வரை போராடிய அணித் தலைவர் தசுன் சானக ஆட்டமிழக்காமல் 108 ஓட்டங்களையும் பெத்தும் நிஸ்ஸங்க 72 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.

இந்த போட்டியில் இலங்கை அணியின் தலைவர் தசுன் ஷனகாவுக்கு எதிரான ‘மன்கட்’ ரன் அவுட் முறையீட்டை திரும்பப் பெற்றதற்காக இந்திய கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்தது அவருக்கு பெரும் பாராட்டுகளை குவித்துவருகின்றது.

முன்னாள் வீரர் சனத் ஜெயசூர்யா உள்ளிட்ட முன்னாள் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் ரோஹித்திற்கு தமது பாராட்டுகளை தெரிவித்துள்ளனர்.

“ரன் அவுட் எடுக்க மறுத்த ரோஹித் ஷர்மாவின் விளையாட்டுத்திறன்தான் உண்மையான வெற்றி.”என்று ஜெயசூர்யா ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

முன்னாள் வீரர் ஏஞ்சலோ மேத்யூஸ், “பல கேப்டன்கள் இதைச் செய்ய மாட்டார்கள், ஆனால் சட்டம் சொன்னாலும் மேல்முறையீட்டைத் திரும்பப் பெற்றதற்காக ரோஹித் சர்மாவுக்கு க்கு வாழ்த்துகள்! என்று பதிவிட்டுள்ளார்.

‘மன்கட்’ ரன் ஆட்டமிழப்பு முறை என்றால் என்ன?

கிரிக்கெட் சட்டத்திட்டத்தின்படி, பந்தை எதிர்கொள்ளும் பேட்ஸ்மேனுக்கு எதிர்தரப்பில் இருக்கும் பேட்ஸ்மேன் பந்துவீசப்படுவதற்குமுன் கிரீஸைவிட்டு வெளியே சென்றால் பந்துவீச்சாளரால் ஆட்டமிழக்க செய்ய முடியும் அதுவே ‘மன்கட்’ ரன் அவுட் முறை எனப்படுகிறது.

இந்த ஆட்டமிழப்பு முறைக்கு ‘மன்கட்’ முறை என்ற பெயர் வர ஒரு இந்திய பந்துவீச்சாளர்தான் காரணம் . 1947ல் நடைபெற்ற இந்தியா – ஆஸ்திரேலியா ஆட்டத்தில், வினு மன்கட் என்ற இந்திய பந்துவீச்சாளர் இதே போன்று ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன் பில் பிரவுனை அவுட் செய்தார்.

கிரிக்கெட் சட்டத்தின்படி இது ஆட்டமிழப்பாக கணக்கில் எடுத்துகொள்ளப்படும் என்றாலும், விளையாட்டின் பொதுப் பண்புக்கு ‘மன்கட்’ எதிராகப் பார்க்கப்படுகிறது. சில கிரிக்கெட் ஜாம்பவான்கள் இதை முறையற்ற உத்தியாகவும் பார்க்கிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button