அவுஸ்திரேலியாவில் கண்டுபிடிக்கப்பட்ட இராட்சத கரும்புத் தேரை
இராட்சத கரும்புத் தேரை ஒன்றை வடக்கு அவுஸ்திரேலியாவின் மழைக்காடு ஒன்றில் இருந்து வனவிலங்கு அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.
2.7 கிலோகிராம் எடை கொண்ட இந்த இராட்சதத் தேரை சராசரி அளவை விடவும் ஆறு மடங்கு பெரிதாகும். இது உலக சாதனை ஒன்றாக இருக்கக் கூடும் என்று நம்பப்படுகிறது.
“டோட்சில்லா” என்று பெயரிடப்பட்ட இந்தத் தேரை, விரைவாக கொள்கலன் ஒன்றில் இடப்பட்டு காட்டில் இருந்து வெளியேற்றப்பட்டது.
பூச்சிகளை அழிக்கக் கூடிய தேரைகள் 1935 ஆம் ஆண்டிலேயே அவுஸ்திரேலியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது அங்கு 2 பில்லியனுக்கும் அதிகமான தேரைகள் இருப்பதாக நம்பப்படுகிறது.
வனப் பாதுகாப்பு அதிகாரியான கைலி கிரே குயீன்ஸ்லாந்தில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோதே இந்த இராட்சதத் தேரையை கண்டுள்ளார். “இத்தனை பெரியதொன்றை நான் ஒருபோதும் கண்டதில்லை” என்று அவுஸ்திரேலிய ஒளிபரப்புக் கூட்டுத்தாபனத்திற்கு அவர் குறிப்பிட்டார்.
“கிட்டத்தட்ட கால்பந்துக்கு கால் முளைத்தது போல் உள்ளது. நாம் அதற்கு டொட்சில்லா என்று பெயிரிட்டோம்” என்றும் அவர் கூறினார்.
வனவிலங்கு அதிகாரிகள் பெண் தேரை என நம்பப்படும் அதனை உடனடியாக தமது தளத்திற்கு எடுத்துச் சென்றனர். இந்தத் தேரை உலகில் மிகப் பெரியதாக இருக்கக் கூடும் என்று அவர்கள் நம்புகின்றனர்.
சுவீடனில் 1991 ஆம் ஆண்டு பதிவான செல்லப்பிராணியாக வளர்க்கப்பட்ட தேரை ஒன்றே தற்போது கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது. அந்தத் தேரை 2.65 கிலோ எடை கொண்டது.