அவுஸ்திரேலியாவில் இலங்கை கிரிக்கெட் குழுவின் நடவடிக்கை தொடர்பிலான அறிக்கை ஆய்வு
விளையாட்டுத் துறை அமைச்சுக்கு அவுஸ்திரேலியாவில் கடந்த ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கிண்ணப் போட்டியுடன் தொடர்புபட்டு இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் நடத்தப்பட்ட விசாரணை அறிக்கையை ஆய்வு செய்து அது பற்றி தமது நிலைப்பாட்டை அறிவுறுத்துவதாக சட்டமா அதிபர் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற விசாரணையில் சட்டமா அதிபர் சார்பில் தோன்றிய ஜனாதிபதி சட்டத்தரணி சுமித் தர்மவர்தன இதனை தெரிவித்துள்ளார்.
ஐவர் அடங்கிய விசாரணைக் குழுவின் அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தை கலைப்பதை தடுக்கும் வகையில் உத்தரவு பிறப்பிக்கும்படி கோரி இலங்கை கிரிக்கெட் நிறுவனத் தலைவர் ஷம்மி டி சில்வா மற்றும் இலங்கை கிரிக்கெட் நிறுவன செயலாளர் மொஹான் டி சில்வா ஆகியோர் மூலம் தாக்கல் செய்யப்பட்ட மனு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டபோது இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
இந்த மனு சோஹித ராஜகருணா மற்றும் தம்மிக்க கனேபொல ஆகியோர் அடங்கிய மேற்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் குழு முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இந்த மனு மீதான விசாரணையை வரும் பெப்ரவரி 1ஆம் திகதி எடுத்துக்கொள்வதற்கும் உத்தரவிடப்பட்டது.
டி20 உலகக் கிண்ணத்தில் இலங்கை வீரர்களின் நடத்தை உட்பட விவகாரங்கள் பற்றி விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி குசலா சரோஜினி வீரவர்தன தலைமையில் குழுவொன்று நியமிக்கப்பட்டது. அந்தக் குழுவின் அறிக்கை விளையாட்டுத் துறை அமைச்சருக்கு தற்போது கையளிக்கப்பட்டுள்ளது.