இந்தியாஉடல்நலம்

சென்னையில் 81 சதவீதம் பேருக்கு ‘விற்றமின்-டி’ குறைபாடு – ஆய்வில் தகவல்!

சமீபத்தில் தனியார் நிறுவனம் ஒன்று விற்றமின் குறைபாடு குறித்து ஆய்வு செய்தது. இது தொடர்பாக 27 நகரங்களில் 2.2 லட்சம் மக்களிடம் பரிசோதனை செய்யப்பட்டது.

இதில் சென்னையில் 81 சதவீதம் பேருக்கு ‘விற்றமின்-டி’ குறைபாடு இருக்கும் அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்கிறது. இந்திய மக்கள் தொகையில் சுமார் 76 சதவீதம் பேர் ‘விற்றமின் டி’ குறைவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

ஆய்வு அறிக்கையின் படி 79 சதவீத ஆண்களுக்கு குறிப்பிட்ட அளவைவிட குறைவாக இந்த சத்து குறைபாடு இருக்கிறது.

இது பெண்களுக்கு 75 சதவீதமாக உள்ளது. தேசிய சராசரியுடன் ஒப்பிடும் போது தற்போது இளைஞர்கள் அதிக அளவில் ‘விற்றமின் டி’ குறைபாட்டால் பாதிக்கப்படுவது கண்டறியப்பட்டு உள்ளது.

இதில் 25 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு 84 சதவீதம், 25 வயது முதல் 40 வயது வரை 81 சதவீதமாக பாதிப்பு உள்ளது. நகரங்களின் அடிப்படையில் வதோரா (89 சதவீதம்), சூரத் (88 சதவீதம்) நகரங்கள் பாதிப்பில் முதல் இடங்களில் உள்ளன.

இதில் சென்னை (81 சதவீதம்) 10-வது இடத்தில் உள்ளது.

மாறி வரும் உணவு பழக்க வழக்கம், வாழ்க்கை முறை முட்டை, மீன் உள்ளிட்டவை உணவில் அதிகம் சேர்க்காததால் இந்த ‘விற்றமின் டி’ குறைபாடு ஏற்படுவதாக நிபுணர்கள் கூறுகிறார்கள். இது தொடர்பாக டாக்டர் ஒருவர் கூறும் போது, “சூரியனில் இருந்து வரும் யு.வி.-பி கதிர்வீச்சு வெளிப்படும் போது, அது விற்றமின் டி ஆக மாறுகிறது.

மாறிவரும் உணவுப் பழக்கவழக்கங்களும், சூரிய ஒளியை போதுமான அளவு உடலில்படும் அளவுக்கு இல்லாத வாழ்க்கை முறையும் விற்றமின் டி குறைபாடுக்கு காரணம் ஆகும். இதில் இளைஞர்கள் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். சத்தான தானியங்கள், முட்டை, மீன்கள் போன்ற விற்றமின் டி அதிகம் கொண்ட உணவுகளை குறைந்த அளவு உணவில் சேர்ப்பதும் காரணமாக இருக்கலாம். சூரிய ஒளியில் பருவகால மாறுபாடுகளும் காரணம் ஆகும்.

விற்றமின் டி குறைபாடு பெண்களின் கர்ப்பம், தாய் மற்றும் குழந்தைக்கு உடல் நிலையை மோசமாக்க வழிவகுக்கும். 6 மாதங்களுக்கு ஒருமுறை அல்லது வருடத்திற்கு ஒரு முறையாவது விற்றமின் டி அளவை வழக்கமான முழு உடல் பரிசோதனைகளுடன் சேர்த்து பரிசோதிக்க வேண்டும். 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் குறைந்த சூரிய ஒளியில் இருப்பவர்கள் விற்றமின் டி குறைபாட்டால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.

முட்டையின் மஞ்சள் கரு, மீன், இறைச்சி மற்றும் சத்தான உணவுகள் போன்றவை விற்றமின் டி பற்றாக்குறையைத் தடுக்க உதவும்” என்றார்.

Back to top button