இலங்கை தொடர்பாக சர்வதேச நாணய நிதியம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவுடன் கூடிய விரிவாக்கப்பட்ட நிதி வசதி தொடர்பான இறுதித் தீர்மானம் எதிர்வரும் 21ஆம் திகதி உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவுள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபைக் கூட்டத்திற்குப் பின்னர் இது தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என குறிப்பிடப்படுகின்றது.
எதிர்வரும் மார்ச் மாதம் 21 ஆம் திகதி இலங்கை நேரப்படி 08.00 மணிக்கு கொழும்பில் விசேட செய்தியாளர் மாநாடு நடைபெறவுள்ளதாக சர்வதேச நாணய நிதியம் உத்தியோகபூர்வமாக இன்று தெரிவித்துள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கை, ஆசியா மற்றும் பசுபிக் திணைக்களத்தின் சிரேஷ்ட தூதுவர் பீட்டர் ப்ரூவர் மற்றும் இலங்கை, ஆசியா மற்றும் பசுபிக் திணைக்களத்தின் தூதரகத்தின் தலைவர் மசாஹிரோ நோசாகி ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர்.
இலங்கைக்கான ஆதரவை வழங்குவது தொடர்பான வேலைத்திட்டம் எதிர்வரும் 20ஆம் திகதி சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபைக்கு சமர்ப்பிக்கப்படவுள்ளது.
சீனா, இந்தியா மற்றும் பாரிஸ் க்ளப் உள்ளிட்ட இலங்கையின் பிரதான கடன் வழங்குனர்களிடமிருந்து நிதி உத்தரவாதங்களைப் பெற்று, தீர்க்கமான கொள்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதில் இலங்கை அதிகாரிகளின் முன்னேற்றம் பாராட்டுக்குரியது என சர்வதேச நாணய நிதியம் ஏற்கனவே கூறியுள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தில் இருந்து 2.9 பில்லியன் அமெரிக்க டொலர்களில் பங்கு நிதி நிவாரணம் கிடைக்கும் என இலங்கை நம்புகிறது.