இலங்கை

பேராதனை பல்கலை துணைவேந்தர் வெளியிட்ட கருத்து!

பேராதனைப் பல்கலைக்கழக வளாகத்தில் காதல் செய்வதும் கட்டித்தழுவுவது தடைசெய்யப்பட்டதல்ல, ஆனால் அளவுக்கு மீறிய செயற்பாடுகள் அனுமதிக்கப்பட மாட்டாது என பேராதனை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர். டி.எம். லமாவன்ச வலியுறுத்தினார். அண்மையில் பேராதனை பல்கலைக்கழகத்தின் செனட் கட்டடத்துக்கு அருகில் காதலர்கள் இருவர் கட்டித்தழுவியபடி நின்றிருந்த சம்பவம் தொடர்பில் பல்கலைக்கழக நிர்வாகத்தின் நடவடிக்கை குறித்து சமூக ஊடகங்களில் விமர்சனங்கள் எழுந்துள்ளதை தொடர்ந்தும் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

பல்கலைக்கழக வளாகத்தில் 1700 ஏக்கர் நிலப்பரப்பில் 13,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி கற்பதாகவும், அவர்களின் உரிமைகள் மற்றும் சுதந்திரத்தை எந்த வகையிலும் கட்டுப்படுத்தப் போவதில்லை என்றும் துணைவேந்தர் கூறியுள்ளார். “எமது நோக்கம் மாணவர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதும் நிலைநிறுத்துவதும் அவர்களின் மன ஆரோக்கியத்தை மேம்படுத்துவதும் ஆகும். கொவிட் 19 தொற்றுநோய் மற்றும் நிலவும் பொருளாதார நெருக்கடி மற்றும் போராட்டங்களைத் தொடர்ந்து ஏற்பட்ட விளைவுகளில் மாணவர்களும் விரிவுரையாளர்களும் மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். இதைக் கருத்தில் கொண்டு, நல்ல மனநிலையுடன் இணக்கமான குழுவாக பணியாற்ற அவர்களை அனுமதிக்கப்பட்டுள்ளனர்” என அவர் தெரிவித்தார். பல்கலைக்கழக வளாகத்தில் கட்டித்தழுவுவது தடைசெய்யப்படவில்லை, எனினும் பல்கலைக்கழகத்துக்கு பார்வையாளர்களாக வருகை தரும், மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் கல்விச் சுற்றுலா வரும் பாடசாலை மாணவர்கள் உள்ளிட்டவர்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தாதவாறு பல்கலைக்கழக மாணவர்கள் தங்களின் வரம்புகளை அறிந்து செயற்பட வேண்டும் என்றும் துணைவேந்தர் மேலும் கூறினார்.

Back to top button