இலங்கை குறித்து IMF இன்று தீர்மானம்!
இலங்கை, சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து 2.9 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கான கடன் நிவாரணத்தை எதிர்ப்பார்த்துள்ளது. இலங்கை பெற்றுக்கொள்வதற்கு எதிர்பார்த்துள்ள கடன் நிவாரணம் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபை இன்று கூடவுள்ளது.
இதற்கமைய, நிறைவேற்றுச் சபையில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள் குறித்த அறிவிப்பை நாளைய தினம் இடம்பெறும் செய்தியாளர் சந்திப்பில் உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்படவுள்ளது. அந்நிய செலாவணி கையிருப்பு இன்மை காரணமாக, இலங்கை பாரிய பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டிருந்த நிலையில், சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை நாடியிருந்தது. இதனையடுத்து, சர்வதேச நாணய நிதியத்தின் ஒப்பந்தத்தின் படி, இலங்கை கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் மற்றும் பிரதான கடன் வழங்குனர்களிடம் பேச்சுவார்தைகளை ஆரம்பித்திருந்தது. முன்னதாக, சர்வதேச நாணய நிதியத்தின் பணிக்குழாம் மட்ட உடன்படிக்கையினை இலங்கை எட்டியிருந்தது. எனினும், பிரதான கடன் வழங்குநரான இந்தியா கடன் மறுசீரமைப்புக்கு இணங்கிய போதிலும், சீனா தமது விருப்பத்தை அண்மையிலேயே சர்வதேச நாணய நிதியத்திற்கு உத்தியோகப்பூர்வமாக அறிவித்திருந்தது. இதனடிப்படையில், சர்வதேச நாணய நிதியம் இன்றைய நிறைவேற்று சபையில் இலங்கைக்கான கடன் நிவாரணம் குறித்த முக்கிய தீர்மானத்தை எடுக்கவுள்ளது. குறித்த கடன் நிவாரண உத்தரவாதத்தினை சர்வதேச நாணய நிதியம் வழங்கும் பட்சத்தில், முதல் கட்டமாக இலங்கைக்கு 390 மில்லியன் டொலர் கிடைக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.