இலங்கை

நாளை ஒரே நேரத்தில் 5 கிரக தரிசனம் – வானில் நிகழவுள்ள அதிசயம்!

நாளை வானில் செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, யுரேனஸ் ஆகிய 5 கிரகங்கள், நிலாவுக்கு அருகே ஒரே வரிசையில் தோன்றப்போகின்றதாக வானியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இந்த வாரத்தில், இந்த கிரக வரிசையைக் காண முடியும் எனவும் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். இவற்றினை காண விரும்புவோர், சூரியன் அஸ்தமனத்துக்கு பிறகு மேற்கு தொடுவானை உற்றுக் கவனிக்க வேண்டும் என நாசா விண்வெளி ஆய்வாளர் பில் குக் கூறியுள்ளார். ஒரே நேரத்தில் 5 கிரக தரிசனம் இரவு வானில், தொடுவானம் தொட்டு பாதி வானம் வரை இந்த 5 கிரகங்களும் வரிசையாக காணப்படும். ஆனால் கொஞ்சம் தாமதித்தாலும், ‘ஒரே நேரத்தில் 5 கிரக தரிசனம்’ தவறிவிடும். சூரியன் மறைந்த அரைமணி நேரத்திலேயே, புதனும், வியாழனும் தொடுவானத்துக்கு கீழே புதைந்துவிடும் எனவும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். வானம் தௌிவாக இருக்கும் நிலையில், மேற்குப்புறத்தை நன்றாக காணமுடியும் சூழலில் உலகின் எந்த மூலையில் இருந்தும் இந்த 5 கிரக வரிசையை காணலாமாம். வியாழன், வெள்ளி, செவ்வாய் கிரகங்கள் பிரகாசமானவை என்பதால் அவற்றைக் காண்பது ஓரளவு எளிது என விண்வெளி ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். அதிலும் வெள்ளி மிகவும் பிரகாசமாக இருக்கும், செவ்வாய் கிரகம், நிலவுக்கு அருகில் சிவப்பாய் ஒளிரும். ஆனால் புதனும், யுரேனசும் கொஞ்சம் ‘டல்’ அடிக்கக்கூடியவை என்பதால் அவற்றை கண்டுபிடிப்பதுதான் கொஞ்சம் சிரமமாக இருக்குமெனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். எனவே பைனாகுலர்ஸ் இருந்தால் வசதியாக இருக்கும். அதிலும், காணவே முடியாத யுரேனஸ் கிரகத்தை காண்பதற்கான அரிய வாய்ப்பாக இது இருக்கும். வெள்ளிக்கு மேலே அது, பச்சையாக மிளிரும் என்கிறார் நாசா விஞ்ஞானி குக். அதேவேளை இது போல பல்வேறு கிரகங்கள், பல்வேறு எண்ணிக்கையில் வானில் வரிசையாக தோன்றுவது அவ்வப்போது நடக்கும் நிகழ்வாகும். அந்தவகையில் கடந்த ஆண்டு கோடைகாலத்தில் 5 கிரகங்கள் வரிசையாக தோன்றின. மீண்டும் அதுபோன்ற ஒரு நிகழ்வு கடந்த ஜூனில் இடம்பெற்றிருந்தமை நினைவில்கொள்ளத்தக்கது.

Back to top button