மற்றுமொரு QR குறியீட்டு முறைமை!
விரைவில் விவசாயிகளுக்காக QR குறியீடு அறிமுகப்படுத்தப்படும் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். இந்த QR முறைமையைப் பயன்படுத்துவதன் மூலம் விவசாயிகள் உரம் மற்றும் விதைகளைப் பெறுவதற்கான வாய்ப்பைப் பெறமுடியும் என அமைச்சர் குறிப்பிட்டார். ஹெக்டர் கொப்பேகடுவ விவசாய ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவகத்தில் விவசாய தொழில்முனைவோர் குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் இதனை தெரிவித்தார்.
இங்கு மேலும் உரையாற்றிய அமைச்சர், உரப்பிரச்சினையினால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த வருடமும் உரங்களுக்கு மேலதிகமாக அவர்களுக்கு நிவாரணம் வழங்கப்படும் எனவும் தெரிவித்தார். இதேவேளை, தேசிய விவசாயக் கொள்கையை எதிர்வரும் ஏப்ரல் இறுதி வாரத்தில் அமைச்சரவையில் சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர இதன்போது தெரிவித்தார்.
அத்துடன், வரைவு செய்யப்பட்டு முடிக்கப்பட்டுள்ள தேசிய விவசாயக் கொள்கையை அமைச்சரவையின் அனுமதியின் பிறகு நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார். அரசாங்கங்கள் அல்லது அமைச்சர்கள் மாறினாலும் மாறாத விவசாயத்திற்கான தேசிய அடையாளத்தை தயாரிப்பதே தனது நோக்கம் என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். தேசிய விவசாயக் கொள்கைக்காக அனைத்து விவசாயப் பிரதிநிதிகளின் கருத்துக்களும் ஆலோசனைகளும் பெறப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.