இலங்கை

உலக வங்கியின் 750 மில்லியன் டொலர் கடன் தாமதம்: வெளியான காரணம்!

நாட்டில் சமுர்த்தி பெறுனர் பட்டியல் உரியமுறையில் சரிபார்க்கப்படவில்லை என்ற காரணத்தினால் உலக வங்கியின் 750 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் தாமதமாகியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தநிலையில், ஏப்ரல் 10ஆம் திகதிக்குள் உரிய ஆவணத்தை நிறைவுசெய்ய முடியும் என்று அரசாங்கம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது. பயனாளிகளின் சரிபார்ப்பு மார்ச் 31ஆம் திகதி வெள்ளிக்கிழமைக்குள் முடிக்கப்படவேண்டும். எனினும் இப்போது ஏப்ரல் 10ஆம் திகதி வரை அது ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக உலக வங்கியின் 750 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியைப் பெற்றுக்கொள்ளும் செயல்முறை தாமதமாகியுள்ளது. இந்த திட்டத்தின் கீழ், பெறுநர்களுக்கு மாதம் 14,000 ரூபா வழங்கப்படும். மேலும், பல சமுர்த்தி பயனாளிகள் வறுமைக் கோட்டிற்குக் கீழே இல்லை என்றும், அதனால், நன்மைகளைப் பெறுவதற்கு அவர்களுக்கு உரிமை இல்லை என்றும் சர்வதேச நாணய நிதியமும் உலக வங்கியும் சுட்டிக்காட்டியுள்ளன.

இதனையடுத்து, உண்மையான பயனாளிகளின் பட்டியலைத் தயாரிக்குமாறு அந்த அமைப்புக்கள் இலங்கை அரசாங்கத்திடம் கோரியுள்ளன. அத்துடன், இந்த இரண்டு அமைப்புகளும் அரசாங்கத்துக்கு முன்னிபந்தனைகளையும் விதித்துள்ளன.

நாடாளுமன்றத்தில் வரவு – செலவுத் திட்ட அலுவலகம் திறக்கப்பட வேண்டும், வருமான சேகரிப்பு மற்றும் உள்நாட்டு வருமானத்தின் கொடுப்பனவுகளை டிஜிட்டல் மயமாக்குதல் வேண்டும், மற்றும் மத்திய வங்கியில் சீர்திருத்தங்கள் என்பவையும் இந்த முன் நிபந்தனைகளில் அடங்குகின்றன. எனினும், இவை இன்னும் நிறைவேற்றப்படவில்லை என்பதை இலங்கை அரச அதிகாரி ஒருவர் ஏற்றுக்கொண்டதாக ஆங்கில செய்தித்தாள் ஒன்று கூறுகிறது.

அத்துடன், அரசாங்கம் சமூகப் பாதுகாப்பு யோசனையை அறிமுகப்படுத்த வேண்டும் என்று குறிப்பிட்டுள்ள திறைசேரியின் மூத்த அதிகாரி ஒருவர், இந்த யோசனை இந்த மாதம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார். சமூக நலன்களுக்காக இதுவரை 3.7 மில்லியன் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. இதில், 2.4 மில்லியன் விண்ணப்பதாரர்கள் இன்றுவரை சரிபார்க்கப்பட்டதாகவும் நலன்புரி நன்மைகள் சபையின் தலைவர் பி.விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

Back to top button