ஏனையவை

அட்சய திருதியையான இன்று இந்த விடயங்களை தவிர்ப்பது நல்லது

அட்சய திருதியை நாளில் விஷ்ணு பகவானையும், மகாலட்சுமியையும் நெய் விளக்கேற்றி, இனிப்புக்கள் படைத்து வழிபடுவது சிறப்புக்குரியது.

அக்ஷ்ய திருதியை

வசந்த காலத்தின் துவக்க காலத்தை மங்கலகரமாக வரவேற்கும் நாளாகவும், மகாலட்சுமியின் அருளையும், மகாவிஷ்ணுவின் அருளையும் பெறுவதற்கு உரிய நாளாகவும் அட்சய திருதியை நாள் கருதப்படுகிறது.

அத்தோடு புதிய துவக்கத்திற்கு உரிய நாளாகவும், நல்ல விஷயங்களை வரவேற்கும் நாளாகவும் அட்சய திருதியை நாள் கருதப்படுகிறது.

இந்து மத நம்பிக்கைகளின் படி, தங்கம் என்பது மகாலட்சுமியின் அடையாளமாக கருதப்படுகிறது. அதனாலேயே மகாலட்சுமியின் அருளை பெறுவதற்காக அட்சய திருதியை நாளில் தங்கம் வாங்கும் பழக்கம் ஏற்பட்டது.

அட்சய திருதியை நாளில் தான் த்ரேதா யுகம் தோன்றியதாக சொல்லப்படுவதால் இந்த நாளை யுகாதி திதி என்றும் அழைக்கின்றனர்.

மங்கலகரமான நாளாகவும், புதிய விஷயங்களை துவங்குவதற்கும் உரிய நல்ல நாளாகவும் இந்த நாள் கருதப்படுகிறது.

இந்த நாளில் மங்கல பொருட்களை வாங்க வேண்டும் என அனைவருக்கும் தெரியும். ஆனால் எந்த விஷயங்களை எல்லாம் தவிர்க்க வேண்டும் என பலருக்கும் தெரிவதில்லை. இந்த நாளில் எந்தெந்த காரியங்களை செய்யலாம், எவற்றை எல்லாம் தவிர்க்க வேண்டும் என சில வரைமுறைகள் உள்ளது.

செய்ய வேண்டியவை

திருமணம், புதிய தொழில் துவங்குவது, புதிய வாகனங்கள் மற்றும் சொத்துக்கள் வாங்குவது முதலீடுகள் செய்வது ஆகியவற்றை செய்யலாம்.

யாகம், பூஜைகள், தானம் தர்மம் செய்தல், புனித நதிகளில் நீராடுதல், பித்ரு தர்ப்பணம் செய்வது ஆகியவற்றை செய்யலாம்.

தங்கம், வீட்டுக்கு தேவையான மங்கல பொருட்கள், உபயோகப் பொருட்கள் வாங்கலாம்.

ஆடைகள், உணவுகள் போன்றவற்றை தானம் செய்யலாம்.

வாய்ப்பு இருப்பவர்கள் பசு மாட்டிற்கு உணவு தானம் வழங்கலாம்.

மகாலட்சுமியையும், மகா விஷ்ணுவையும் வழிபட வேண்டும்.

சாத்வீக உணவுகளை நைவேத்தியமாக படைத்து, பிரசாதத்தை மற்றவர்களுக்கும் கொடுத்து நாமும் சாப்பிட வேண்டும்.

செய்யக் கூடாதவைகள்

அசைவ உணவுகள், மது போன்ற போதை பொருட்களை தவிர்க்க வேண்டும்.

வெங்காயம், பூண்டு ஆகியவற்றை தவிர்க்க வேண்டும்.

அட்சய திருதியை நாளில் விரதம் இருந்து வழிபடலாம். ஆனால் விரதத்தை நிறைவு செய்வது துரதிஷ்டத்தை ஏற்படுத்தும்.

இந்த நாளில் யாருடனும் சண்டையிடுவதோ, கோபப்படுவதோ, அமங்கலமான சொற்களை போசுவதோ கூடாது.

வீட்டை இருள் அடைய விடக் கூடாது. வீட்டில் எந்த பகுதியாவது இருட்டாக இருந்தால் அங்கு விளக்கேற்றி வைக்க வேண்டும்.

அட்சய திருதியை வழிபாட்டு முறைகள்

விஷ்ணுவையும், மகாலட்சுமியையும் தனித் தனியாக வழிபடக் கூடாது. மகாலட்சுமி, தவம் செய்து பெருமாளின் திருமார்பில் நிரந்தர இடம் பிடித்த நாள் அட்சய திருதியை என்பதால் அவர்களை பிரித்து பார்க்கக் கூடாது.

அட்சய திருதியை நாளில் ஏதாவது வாங்க வேண்டும் என வெளியில் சென்று விட்டு வெறும் கையுடன் வீட்டிற்கு திரும்பக் கூடாது. எதுவும் வாங்க முடியாதவர்கள், பூ மட்டுமாவது வாங்கி வர வேண்டும்.

குளிப்பதற்கு முன் துளசி இலைகளை பறிக்கக் கூடாது.

குளிக்காமலும், அழுக்கான ஆடைகளுடனும் இருக்கக் கூடாது.

Back to top button