இலங்கை

மணிப்பூரில் அதிகரிக்கும் மோதல் சம்பவங்கள்!

மணிப்பூரில் பழங்குடியினருக்கும், பழங்குடியினர் அல்லாத சமூகத்தினருக்கும் இடையே மோதல் போக்கு நடைபெற்று வரும் நிலையில் கிளர்ச்சியாளர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் போலீஸ் கமாண்டோ ஒருவர் கொல்லப்பட்டிருக்கிறார். மேலும் 5 பேர் காயமடைந்துள்ளனர்.

அடர்த்தியான காடுகள் நிறைந்த மணிப்பூர் மாநிலத்தில் பழங்குடியின மக்களும், சமவெளி பகுதிகளில் மைத்தேயி சமூக மக்களும் வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் சமீப காலங்களாக மணிப்பூருக்கு குறிப்பிட்ட அளவில் மக்கள் புலம்பெயர்ந்து வருகிறார்கள். இப்படி இருக்கையில் மைத்தேயி மக்கள் தங்களையும் பழங்குடியின சமூகத்தினராக அங்கீகரிக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

மாநிலத்தின் ஒட்டுமொத்த மக்கள் தொகையில் இவர்கள் 53 சதவிகிதம் இருக்கின்றன. மட்டுமல்லாது சட்டமன்றங்களிலும் இவர்கள்தான் பெரும்பான்மையினராக இருக்கின்றனர். இந்நிலையில் சமீபத்தில் நடந்த தேர்தலின்போது இவர்களுக்கு பழங்குடியின அந்தஸ்து வழங்கப்படும் என்று பாஜக வாக்குறுதி அளித்திருந்தது. இதனையடுத்து தேர்தலில் பாஜக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்திருக்கிறது. இந்நிலையில் ஆளும் கட்சியான பாஜகவுக்கு மைத்தேயி சமூகத்தினர் தேர்தல் வாக்குறுதி தொடர்பாக அழுத்தம் கொடுத்திருக்கின்றனர்.

எனினும், பாஜக தொடர்ந்து மவுனம் காத்து வந்தது. இதனையடுத்து மைத்தேயி மக்கள் நீதிமன்றத்தை நாடினர். வழக்கை விசாரித்த நீதிமன்றம், மைத்தேயி சமூகத்தினரின் கோரிக்கையின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கடந்த ஏப்ரல் 19ம் தேதி உத்தரவிட்டிருந்தது. ஆனால் இதற்கு பழங்குடியினர் சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. காலங்காலமாக இந்த மலையோடு வாழ்ந்து வரும் எங்களுக்கு கொடுக்கும் அத்துனை சலுகைகளையும் பழங்குடியினர் அல்லாதோருக்கு கொடுப்பது ஏற்புடையது அல்ல என்று கூறி மைத்தேயி சமூகத்தினருக்கு பழங்குடி அந்தஸ்து வழங்குவதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்நிலையில், தங்களது உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என்று கூறி, அனைத்து பழங்குடி மாணவர் சங்கம் மணிப்பூர் (ATSUM) சார்பில் கடந்த 3ம் தேதி பேரணிக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. சேனாபதி, உக்ருல், காங்போக்பி, தமெங்லாங், சுராசந்த்பூர், சண்டேல் மற்றும் தெங்னௌபல் என 7 மாவட்டங்களில் இந்த பேரணி நடைபெற்றது. ஆனால் இதற்கு போட்டியாக பழங்குடியினர் அல்லாதவர்களும் பேரணி நடத்தினர். இப்படியாக நடத்தப்பட்ட போட்டி பேரணியானது சுராசந்த்பூர் மாவட்டத்தில் சந்தித்துக்கொண்டபோது கலவரமாக வெடித்து.

இரு தரப்பினரும் கத்தி, அருவா ஆகியவற்றைகொண்டு ஒருவரையொருவர் கொடூரமாக தாக்கிக்கொண்டனர். இதில் ஏராளமான வீடுகளுக்கும், வாகனங்களுக்கும் தீ வைக்கப்பட்டது. அதேபோல இரு தரப்பிலும் குறிப்பிட்ட அளவில் சிலர் உயிரிழந்தனர். நிலைமை கையை மீறி செல்வதை பார்த்த மாநில அரசு உடனடியாக ராணுவத்திற்கு அழைப்பு விடுத்தது. தற்போது ராணுவம் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளது. இருப்பினும் ஒரு சில இடங்களில் பிரச்னை தொடர்ந்து நீடித்து வருகிறது. அப்படியானை இடங்களில் ஒன்றுதான் தேரா கோங்ஃபாங்பி. இந்த பகுதியில் நேற்று காவல்துறையினர் வழக்கம் போல ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது எதிர்பாராத விதமாக காவல்துறையினர் மீது குகி சமூகத்தை சேர்ந்தவர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். இதில் ஒவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மேலும் 5 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் இதில் ஒருவரின் நிலை கவலைக்கிடடமாக இருப்பதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

இதனையடுத்து, மீண்டும் மணிப்பூரை வன்முறை மேகங்கள் சூழ தொடங்கியுள்ளன. மக்கள் தங்கள் வீடுகளில் தங்களுடைய சமூகத்தின் பெயரை எழுதி வைக்க தொடங்கியுள்ளனர். இப்படி செய்வதன் மூலம் சொந்த சமூகத்தின் மீதான் தாக்குதல்கள் குறையாலாம் என்று நம்பப்படுகிறது.

Back to top button