மொக்கா சூறாவளியின் தீவிரம்!- வானிலை தொடர்பில் வெளியான தகவல்
வளிமண்டலவியல் திணைக்களம் மொக்கா சூறாவளியானது தீவிரமடைந்து பலமிக்க சூறாவளியாக வடமேற்கு திசையை நோக்கி நகரவுள்ளதாக எதிர்வு கூறியுள்ளது. இந்த சூறாவளியானது அடுத்து வரும் 6 மணித்தியாலங்களில் வலுவடைந்து வங்காள விரிகுடாவின் மத்திய பிரதேசத்தை நோக்கி நகரும். இதன்பின்னர், படிப்படையாக திசையை மாற்றி நாளை மறுதினம் அளவில் தென்கிழக்கு பங்களாதேஷ் மற்றும் வடக்கு மியன்மாரை ஊடறுத்துச் செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதேவேளை, இன்று காலை எட்டு மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் கொழும்பு – கலட்டுவாவ பகுதியில் அதிகளவான மழை வீழ்ச்சி பதிவானது. இதன்படி அந்த பகுதியில் 225.5 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி பதிவானது. அத்துடன், லபுகம பகுதியில் 199 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி பதிவானது.
தற்போது நாட்டில் நிலவும் மழையுடனான வானிலை காரணமாக, களனி, களு, ஜின் மற்றும் நில்வள கங்கை ஆகியவற்றின் நீர்மட்டம், ஓரளவு அதிகரித்துள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது. குறித்த பகுதிகளில், இன்றும், நாளையும் குறிப்பிடத்தக்க அளவு மழைவீழ்ச்சி பதிவானால், அந்த கங்கைகளில் ஓரளவு நீர் பெருக்கெடுக்கும் நிலை ஏற்படக்கூடும். எனவே, குறித்த கங்கைகளையும், அவற்றின் கிளை ஆறுகளையும் பயன்படுத்துபவர்கள், அவதானத்துடன் இருக்க வேண்டும் என்று நீர்ப்பாசன திணைக்களம் அறிவுறுத்தல் விடுத்துள்ளது.