தெருக்களில் வீடில்லாமல் வாழ்வோருக்கு அரண்மனையில் இடம் கொடுக்கலாமே என்ற கேள்விக்கு இளவரசர் வில்லியமுடைய பதில்!
பிரித்தானியாவில் வீடில்லாமல் தெருக்களில் வாழ்வோரின் கஷ்டங்களை நிரந்தரமாக ஒழிக்க உறுதிபூண்டுள்ளார் வருங்கால மன்னரான இளவரசர் வில்லியம். சமீபத்தில், பிரபல பிரித்தானிய ஊடகம் ஒன்றின் ஆசிரியர், இளவரசர் வில்லியமை மடக்கி ஒரு கேள்வியைக் கேட்டார். விடயம் என்னவென்றால், இளவரசர் வில்லியமுடைய கட்டுப்பாட்டில் Duchy of Cornwall என்னும் 130,000 ஏக்கர் பரப்புள்ள சொத்து உட்பட பல சொத்துக்கள் உள்ளன. அந்த நிலப்பகுதி கார்ன்வால் முதல் கென்ட் வரை பரந்து விரிந்து காணப்படுகிறது.
ஆக, இவ்வளவு நிலம் வைத்திருக்கும் இளவரசர் வில்லியம், வீடில்லாமையை ஒழிக்க உறுதிவேறு பூண்டுள்ளார், ஆக, அந்த நிலத்தை வீடில்லாதவர்களுக்காக பயன்படுத்த ஏதாவது திட்டம் உள்ளதா என்று வில்லியமை நேரடியாகவே கேட்டார் Roya Nikkhah என்னும் ஊடகவியலாளர். எனவே, சட்டென Roya Nikkhahவுக்கு பதிலளிக்க இயலாமல் மௌனம் காத்த வில்லியம், பின்னர் சுதாரித்துக்கொண்டு, நிச்சயமாக, சமூக இல்லங்கள் தயாராகும்போது நீங்களே அவற்றைப் பார்ப்பீர்கள், நான் கொள்கை நிபுணர் அல்ல, ஆனால், என்னால் என்ன செய்யமுடியுமோ அதைச் செய்வேன் என்றார்.