இலங்கை

வடக்கு – கிழக்கு தழுவிய கடையடைப்பு! யாழில் இயல்பு நிலை பாதிப்பு

ஹர்த்தால் காரணமாக யாழ்ப்பாண மாவட்டத்தில் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது. யாழ் நகர், வடமராட்சி, தென்மராட்சி, வலிகாமம், தீவகம் என பல பகுதிகளிலும் மக்களின் நடமாட்டம் வர்த்தக நடவடிக்கைகள் போக்குவரத்து செயற்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளது. கொக்குத்தொடுவாய் மனித புதைகுழிக்கு நீதி கோரி வடக்கு – கிழக்கு மாகாணங்களில் ஹர்த்தாலும் முல்லைத்தீவில் கவனயீர்ப்பு பேரணியும் இன்று (28.07.2023) இடம்பெற அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில் யாழ்ப்பாண மாவட்டத்தில் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், யாழ். மாவட்டத்தில் உணவகங்கள் மற்றும் மருந்தகங்கள் தவிர்ந்த ஏனைய கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ள நிலையில் காணப்படுகிறது. இலங்கை போக்குவரத்து சபையின் பேருந்து சேவை இடம்பெற்று வருகின்ற போதும் தனியார் பேருந்து சேவைகள் இடம்பெறவில்லை. யாழ்ப்பாணம் நெடுந்தூர பேருந்து நிலையம் வெறிச்சோடி காணப்பட்டது. பொதுமக்கள் நடமாட்டம் அங்காங்கே காணப்பட்டாலும் வழமையான நிலையுடன் ஒப்பிடும்போது குறைவாகவே உள்ளது. முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழிக்கு நீதி கோரி வடக்கு – கிழக்கு தழுவிய ரீதியில் இன்றைய தினம் (28.07.2023) கடையடைப்பு போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் இந்த போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தனர். அந்தவகையில் கடையடைப்பிற்கு பல தொழிற்சங்கங்கள் மற்றும் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் என பல்வேறு தரப்பினரும் ஆதரவினை வழங்குவதாக அறிவித்துள்ளனர்.

இதேவேளை, சாவகச்சேரி நகரத்தில் வர்த்தக நிலையங்கள், பொதுச்சந்தைகள் அனைத்தும் முற்றாக மூடப்பட்டு இந்த கடையடைப்பிற்கு ஆதரவு வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் வடக்கில் உள்ள பல நகரங்கள் முற்றாக முடங்கிய நிலையில் காணப்படும் நிலையில் தென்மராட்சியின் முக்கிய நகரமான சாவகச்சேரியில் உள்ள உணவகங்கள் தவிர்ந்த மருந்தகங்கள் உட்பட்ட அனைத்து வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டுள்ளதோடு பொதுச்சந்தையும் முற்றாக மூடப்பட்டுள்ளது. இதேநேரம் அரச, தனியார் வங்கிகளும் பிரதான வாயில்களை மூடி வாடிக்கையாளர் சேவைகளை வழங்குவதை முற்றாக தவிர்த்துள்ளதாக அங்கிருக்கும் எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். உள்ளூர் மற்றும் வெளிமாவட்ட தனியார் பேருந்துகள் போக்குவரத்தில் ஈடுபடாமையினால் அரச உத்தியோகத்தர்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டுள்ளதுடன், பாடசாலைகளிலும் மாணவர்களின் வரவு மிகவும் குறைந்த நிலையிலேயே காணப்படுவதாகவும் தெரியவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Back to top button