ஏனையவை

அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் மாஸ்க்கிற்கு பதில் டீ கப் பயன்படுத்தும் அவலம்!

தமிழகத்தில் அரசு மருத்துவமனையில் பள்ளி சிறுவனுக்கு ஆக்சிஜன் மாஸ்க் பயன்படுத்துவதற்கு பதில் டீ கப் பயன்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்திய மாநிலம் தமிழகத்தில் காஞ்சிபுரம் மாவட்ட உத்திரமேரூர் பகுதியைச் சேர்ந்த பள்ளியில் உள்ள மாணவர் ஒருவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. உடனே, அங்கிருந்த ஆசிரியர்கள் மாணவனின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதனையடுத்து, பள்ளிக்கு வந்த பெற்றோர், அருகிலிருந்த உத்திரமேரூர் அரசு மருத்துவமனைக்கு மாணவனை கொண்டு சென்றனர். அங்கு, மாணவனை பரிசோதித்த மருத்துவர்கள் மூச்சு திணறலை தடுக்க ஆக்சிஜன் மாஸ்க் பொருத்தும்படி கூறினர். பின்பு, மாணவனை அங்கிருந்த வார்டில் அனுமதித்தனர். இந்த ஆக்சிஜன் மாஸ்க் பொருத்துவதால் ஒரு துவாரத்தின் வழியே ஆக்சிஜன் சிலிண்டரில் இருந்து வரும் ஆக்சிஜனை சுவாசித்து மற்றொரு துவாரத்தின் வழியே கார்பன் டை ஆக்ஸைடை வெளியேற்ற ஏதுவாக இருக்கும்.

இந்நிலையில், மருத்துவமனையில் ஆக்சிஜன் மாஸ்க் இல்லாததால் அருகிலிருந்த கடைக்கு சென்று டீ கப் பயன்படுத்த முடிவு செய்துள்ளார்கள். பின்பு, டீ கப்பில் துளையிட்டு ஒரு துவாரத்தின் வழியே ஆக்சிஜன் சிலிண்டரில் இருந்து வரும் டியூபை இணைத்து மாணவனிடம் கொடுத்து மூக்கில் வைத்து பிடித்துக் கொள்ளும்படி கூறியுள்ளார்கள். இதனை, அருகில் இருந்த நோயாளி ஒருவர் வீடியோவாக எடுத்து வெளியிட்டுள்ளார். மேலும், அவர் இந்த மாதிரி நடப்பது முதல்முறையல்ல, கடந்த வாரமும் ஒருவருக்கு இப்படி தான் நடந்துள்ளது” என பேசியுள்ளார்.

இதேவேளை, அரசு மருத்துவமனையில் அலட்சியமாய் இருந்ததற்கு சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். ஆக்சிஜன் மாஸ்கிற்கு பதில் டீ கப் பயன்படுத்தியற்கும் மருத்துவர்கள் எந்த பதிலும் தெரிவிக்கவில்லை. இந்த விவகாரம் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கவனத்திற்கு சென்றதையடுத்து மருத்துவ பணிகள் இயக்குனரிடம் விசாரிக்கும்படி உத்தரவிட்டுள்ளார்.

Back to top button