பிரிட்டன் மருத்துவர்களுக்கு சம்பள உயர்வு
பிரிட்டனில் உள்ள இளநிலை டாக்டர்கள் தங்களுக்கு 35 சதவீதம் சம்பள உயர்வு வழங்க வேண்டும் என அரசாங்கத்திடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் உடன்பாடு எட்டப்படாததால் அவர்கள் கடந்த பல மாதங்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதே கோரிக்கையை வலியுறுத்தி ரெயில்வே, விமான போக்குவரத்து உள்பட பல்வேறு துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் போராட்டத்தில் ஈடுபடும்போது பேச்சுவார்த்தை நடத்துவதில்லை என்ற கொள்கையில் அரசாங்கம் உறுதியாக உள்ளது.
கொரோனா தொற்று, உக்ரைன் போர், பிரெக்சிட் அமைப்பில் இருந்து வெளியேற்றம் போன்றவற்றால் ஏற்கனவே பிரிட்டனின் பொருளாதாரம் அதல பாதாளத்தில் உள்ளது. இந்தநிலையில் 35 சதவீத சம்பள உயர்வு வழங்கினால் அது பணவீக்கத்தை இன்னும் அதிகரித்து விடும். இதனால் ஏழைகள் பெரும் இன்னலுக்குள்ளாக நேரிடும் என பொருளாதார நிபுணர்கள் எச்சரித்தனர். எனினும் நாடு முழுவதும் உள்ள இளநிலை டாக்டர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருவதால் அங்கு நோயாளிகளின் காத்திருப்பு பட்டியல் நீண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் நோயாளிகள் சிகிச்சை பெற முடியாமல் அவதிப்பட்டு வந்தனர். இந்தநிலையில் தற்போது முதலாம் ஆண்டு பயிற்சி டாக்டர்களுக்கு 10.3 சதவீதமும், இளநிலை டாக்டர்களுக்கு 8.8 சதவீதமும், மருத்துவ ஆலோசகர்களுக்கு 6 சதவீதமும் சம்பள உயர்வு வழங்கப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது. இதன்மூலம் அவர்களுக்கு கணிசமாக சம்பளம் உயர்வதோடு பணவீக்கமும் ஓரளவு கட்டுப்பாட்டில் இருக்கும் என கருதப்படுகிறது. அரசின் இந்த அறிவிப்பால் நாடு முழுவதும் உள்ள சுமார் 1 லட்சத்து 50 ஆயிரம் இளநிலை டாக்டர்கள் பயன்பெறுவார்கள் என பிரிட்டன் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.