இலங்கையில் நிகழ்ந்த ஈஸ்டர் குண்டுவெடிப்பு கோட்டபாய ராஜபக்ஸ ஆட்சிக்கு வர செய்த சதியா?- சனல் 4 ஆவணப் படம்
இலங்கையில் 2019ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21ம் தேதி ஈஸ்டர் தினத்தன்று நடத்தப்பட்ட தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்கள் தொடர்பில் சேனல் 4 இன்று அதிகாலை வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தது. இந்த வீடியோவில் ஈஸ்டர் தாக்குதலுடன் ராஜபக்ஸ குடும்பம் உள்ளிட்ட சிலருக்கு தொடர்பு இருப்பதாக தெரிவித்தே இந்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. கோத்தபய ராஜபக்ஸ வெற்றி பெறுவதற்காக புலனாய்வு அமைப்புகளுடன் இணைந்து இதற்கான சதித் திட்டம் தீட்டப்பட்டடதாக சேனல்-4 ஆவணப்படம் கூறுகிறது.
இந்நிலையில் ராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தனின் (பிள்ளையான்) ஊடகப் பேச்சாளராக கடமையாற்றிய அசாத் மௌலானா இந்த வீடியோவின் பிரதான சாட்சியாளராக விளங்குகின்றார். அசாத் மௌலானா தற்போது சுவிட்ஸர்லாந்தில் அரசியல் புகலிடம் கோரியுள்ளதாக தெரிய வருகின்றது. அத்துடன், வெள்ளை வேன் விவகாரத்தில் நாட்டிலிருந்து வெளியேறிய குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் பிரதானியான நிஷாந்த சில்வா கந்தப்பா, ஊடகவியலாளராக பேட்ரிகா ஜென்ஸ், கொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் சகோதரன் லால் விக்ரமதுங்க, இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் அம்பிகா சற்குணநாதன், முன்னாள் ராஜதந்திர அதிகாரி சரத் கொன்காகே, கொழும்பு பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்ஜித் ஆண்டகை ஆகியோர் இந்த வீடியோவில் சாட்சி வழங்கியுள்ளனர்.
மீண்டும் ராஜபக்ஸ குடும்பத்தை ஆட்சிக்கு கொண்டு வர நாட்டிற்குள் பாதுகாப்பற்ற நிலையொன்றை ஏற்படுத்த வேண்டும் என்ற விதத்தில் கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டதாக இந்த வீடியோவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கையின் முன்னாள் ராணுவ புலனாய்வு பிரிவின் பிரதானியான மேஜர் ஜெனரல் சுரேஷ் சலேவிற்கும், தௌஹித் ஜமாத் அமைப்பிற்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்த விவகாரம் கலந்துரையாடப்பட்டுள்ளதாக அசாத் மௌலானா அந்த வீடியோவில் கூறியுள்ளார். அத்துடன், ராஜபக்ஸ குடும்பத்தின் குற்றங்கள் என அடையாளப்படுத்தி மேலும் சில தகவல்களையும் சேனல் 4 வெளியிட்டுள்ளது. ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் கொலை தொடர்பில் ஊடகவியலாளர் பேட்ரிகா ஜென்ஸ் மற்றும் லசந்த விக்ரமதுங்கவின் சகோதரன் லால் விக்ரமதுங்க ஆகியோர் இந்த வீடியோவில் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
குறித்த விவகாரம் தொடர்பில் முன்னாள் ராணுவ புலனாய்வு பிரிவின் பிரதானியான மேஜர் ஜெனரல் சுரேஷ் சலேவிடம், சேனல் 4 ஆவணப் படம் எழுத்து மூலம் கேள்விகளை எழுப்பியுள்ளது. சேனல் 4 தொலைக்காட்சியினால் முன்வைக்கப்பட்டுள்ள அனைத்து குற்றச்சாட்டுகளையும் முன்னாள் ராணுவ புலனாய்வு பிரிவின் பிரதானியான மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே நிராகரித்துள்ளதாக சேனல் 4 ஆவணப்படத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. ராஜபக்ஸ குடும்பத்தை ஆட்சிக்கு கொண்டு வர நாட்டில் பாதுகாப்பற்ற நிலைமையொன்றை ஏற்படுத்த வேண்டும் என ராஜபக்ஸ குடும்பம் எண்ணியதா எனவும், தௌஹித் ஜமாத் அமைப்புடன் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டதா எனவும் சேனல் 4, முன்னாள் ராணுவ புலனாய்வு பிரிவின் பிரதானியான மேஜர் ஜெனரல் சுரேஷ் சலேவிடம் வினவியுள்ளது. இந்த அனைத்து குற்றச்சாட்டுகளையும் அவர் நிராகரித்துள்ளது. தௌஹித் ஜமாத் அமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக கூறப்படும் காலப் பகுதியில் தான் மலேசியாவில் தங்கியிருந்ததாக அவர் கூறியுள்ளார். அத்துடன், ஈஸ்டர் குண்டுவெடிப்பு நடத்தப்படும் தருணத்தில் தான் இந்தியாவில் இருந்ததாகவும் அவர் சேனல் 4 தொலைக்காட்சிக்கு பதிலளித்துள்ளார்.