மீண்டும் பிரித்தானியாவில் ஒரு குளிரூட்டப்பட்ட லொறிக்குள் புலம்பெயர்வோர்: தவிர்க்கப்பட்ட அசம்பாவிதம்
பிரித்தானியாவில், குளிரூட்டப்பட்ட லொறி ஒன்றிற்குள் 39 புலம்பெயர்வோர் உயிரற்ற நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கியது நினைவிருக்கலாம். தற்போது, மீண்டும் ஒரு குளிரூட்டப்பட்ட லொறிக்குள் புலம்பெயர்வோர் குடும்பம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இங்கிலாந்திலுள்ள கேம்பிரிட்ஜ் நகருக்கு திராட்சைப் பழங்கள் ஏற்றிவந்த குளிரூட்டப்பட்ட லொறி ஒன்றிலிருந்து பழங்களை இறக்கும்போது, லொறிக்குள் யாரோ சிலர் இருப்பது தெரியவரவே பொலிசாருக்கு தகவலளிக்கப்பட்டுள்ளது.
விரைந்துவந்த பொலிசார், திராட்சைப் பழங்கள் அடங்கிய பெட்டிகளை அகற்ற, லொறிக்குள் ஒரு பெண்ணும், அவரது பிள்ளைகளான இரண்டு சிறுபிள்ளைகளும் இருப்பது தெரியவந்துள்ளது. மூன்று நாட்களாக அந்த மூன்று பேரும் அந்த குளிரூட்டப்பட்ட லொறிக்குள்ளேயே இருந்துள்ளார்கள். அதிர்ஷ்டவசமாக அவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. எப்படியும், சரியான நேரத்தில் அவர்கள் கண்டுபிடிக்கப்பட்டதால், ஒரு அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது. தற்போது அவர்கள் புலம்பெயர்தல் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்கள். அவர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது குறித்த விவரம் வெளியாகவில்லை.