இலங்கை

நிதி அமைச்சர் நலன்புரி கொடுப்பனவுகள் தொடர்பில் வெளியிட்ட விசேட அறிவிப்பு!

நாட்டில் சிறுநீரக நோயாளர்கள், விசேட தேவையுடையோர் மற்றும் குறைந்த வருமானம் பெறும் முதியோருக்கான கொடுப்பனவுகளை வழங்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். இராஜாங்க அமைச்சர் தமது டுவிட்டர் பதிவில் இதனைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், அடுத்த சில நாட்களில் 647,683 பேருக்கு கொடுப்பனவுகளை வழங்குவதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அதற்கமைவாக, காத்திருப்போர் பட்டியல் உட்பட 517,962 பேருக்கு முதியோர் உதவித்தொகையும், 88,602 பேருக்கு விசேட தேவையுடையோருக்கான உதவித் தொகையும், 41,119 பேருக்கு சிறுநீரக நோயாளர் உதவித்தொகையும் வழங்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், முதியோர் கொடுப்பனவு அஞ்சல் அலுவலகங்கள் ஊடாகவும் விசேட தேவையுடையோர் மற்றும் சிறுநீரக கொடுப்பனவுகள் பிரதேச செயலகங்கள் ஊடாகவும் வழங்கப்பட வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Back to top button