வங்காள விரிகுடா கடல் பிராந்தியத்தில் உருவாகும் தாழமுக்கம் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

நாட்டின் கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் அத்துடன் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வானிலை குறித்து திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளதாவது, வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் பல இடங்களில் ஒரளவு மழை ஏற்படக்கூடும் என திணைக்களம் குறிப்பிடுகிறது.
இந்நிலையில் நாட்டின் ஏனைய மாகாணங்களில், இன்று பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர், சில பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். மத்திய, ஊவா மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மி.மீ அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. இடியுடன் கூடிய மழையுடன் கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
மேலும், தென் அந்தமான் கடல் பிராந்தியத்தில் வங்காள விரிகுடா கடல் பிராந்தியத்தின் தென்கிழக்குப் பகுதியுடன் இணைந்ததாக தாழ் அமுக்கப் பிரதேசம் ஒன்று உருவாகியுள்ளது. இது மேற்கு – வடமேற்குத் திசையை நோக்கி நகர்வதுடன் நாளையளவில் மேலும் தீவிரமடைந்து தாழ் அமுக்கமாக வங்காள விரிகுடாவின் தென்கிழக்கு கடல்பிராந்தியத்திற்கு மேலாக காணப்படும். எனவே மீனவர்களும் கடல் சார் ஊழியர்களும் வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளிவிடப்படுகின்ற எதிர்கால வானிலை எதிர்வு கூறல்களை கவனித்திற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.